வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முந்திரி கொட்டைகளுக்கு வரியை ரத்து செய்ய வேண்டும்: ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்


வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முந்திரி கொட்டைகளுக்கு வரியை ரத்து செய்ய வேண்டும்: ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 23 July 2018 3:30 AM IST (Updated: 23 July 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முந்திரி கொட்டைகளுக்கு இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பண்ருட்டியில் நடந்த முந்திரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பண்ருட்டி,

தமிழ்நாடு முந்திரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் பண்ருட்டியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் டி.ஆர்.வி.எஸ்.ஸ்ரீரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் பிரத்திபா கேஷ்யூஸ் ராமகிருஷ்ணன் வரவேற்றார். டி.ஆர்.வி. முந்திரி நிறுவன இயக்குனர் விஜயகாந்த், நிஷா டிரேடர்ஸ் பாரதிதாசன், சிவகுமார், மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சுப்பிரமணியன், துணை மண்டல மேலாளர் சேகர், பண்ருட்டி கிளை மேலாளர் ராமராஜன், நெய்வேலி கிளை மேலாளர் ராஜசேகர், கரூர் வைசியா வங்கி மண்டல மேலாளர் முத்துகிருஷ்ணன், பண்ருட்டி கிளை மேலாளர் கோபிநாத், ஏற்றுமதியாளர்கள் பிரத்திபா பாலகிருஷ்ணன், சிவா, மோகன், பாலு, பிரசாத் மற்றும் முந்திரி விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட வங்கி அதிகாரிகள், முந்திரி தொழிலுக்கான வளர்ச்சியில் வங்கிகளின் முக்கிய பங்கு குறித்து பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முந்திரி கொட்டைகளுக்கு இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும்

முந்திரி விற்பனையில் ஏற்பட்டுள்ள கடும் மந்தநிலைக்கு அன்னிய செலாவணி சந்தையில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிஅடைந்ததே முக்கிய காரணம். உடனடியாக மத்திய அரசு இதை கவனத்தில் கொண்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ரிசர்வ் வங்கி உத்தரவினால் வங்கிகள் எல்.ஓ.யூ. கடன் முறையை நிறுத்தி வைத்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் எல்.ஓ.யூ. முறையில் கடன் வழங்க வேண்டும்.

முந்திரி ஏற்றுமதிக்கு மத்திய அரசு வழங்கி வந்த 5 சதவீத ஊக்கத்தொகை கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2 சதவீதமாக குறைக்கப்பட்டது. முந்திரி ஏற்றுமதியாளர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் இந்த ஆண்டு முதல் ஊக்கத்தொகையை 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இடைப்பட்ட 4 ஆண்டுகளில் விடுபட்ட 3 சதவீத ஊக்கத்தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொருளாளர் செல்வமணி நன்றி கூறினார்.

Next Story