திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது: 14 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு
திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 14 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.
திண்டிவனம்,
திண்டிவனம் நகரில் கடந்த சில மாதங்களாக மோட்டார் சைக்கிள்கள் அதிகளவில் திருட்டு போனது. இதுகுறித்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்படி திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் மேற்பார்வையில் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், ரங்கராஜ், மகாலிங்கம், பாண்டியன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிள் திருடர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையிலான தனிப்படை போலீசார் திண்டிவனம் காவேரிப்பாக்கம் மொட்டையன் தெரு சந்திப்பு பகுதியில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் திண்டிவனம் காவேரிப்பாக்கம் மிட்டாய் முனியன் தெருவை சேர்ந்த மம்முது மகன் சையத் இப்ராகிம்(வயது 38) என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் திண்டிவனம் நகர பகுதியில் 15-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை திருடி, ஒரு சில மோட்டார் சைக்கிள்களை தனித்தனியாக பிரித்து அதன் உதிரிபாகங்களை விற்பனை செய்ததும் தெரிந்தது.
இதையடுத்து சையத் இப்ராகிமை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 14 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் உதிரிபாகங்கள் மீட்கப்பட்டு, போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன.
இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திண்டிவனம் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்து, சையத் இப்ராகிமிடம் இருந்து மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், உதிரிபாகங்களை பார்வையிட்டார். மேலும் திண்டிவனம் பகுதியில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்த தனிப்படை போலீசாரை அவர் பாராட்டினார்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், திண்டிவனம் நகர பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் புதிதாக 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திண்டிவனம் போலீஸ் நிலையத்துக்கு 13 போலீசார் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் முக்கிய விழா காலங்களில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து பணிபுரிவார்கள். குயிலாப்பாளையம் பாபு கொலையானது சொத்து பிரச்சினைக்காக நடந்துள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story