கம்பத்தில், கலப்புத்திருமணம் செய்த தம்பதிக்கு சரமாரி அரிவாள் வெட்டு: உறவினர் கைது


கம்பத்தில், கலப்புத்திருமணம் செய்த தம்பதிக்கு சரமாரி அரிவாள் வெட்டு: உறவினர் கைது
x
தினத்தந்தி 23 July 2018 4:45 AM IST (Updated: 23 July 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் கலப்புத்திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து பெண்ணின் உறவினர் கைது செய்யப்பட்டார்.

கம்பம்,

கம்பம் 4-வது வார்டு மாலையம்மாள்புரம் தெருவை சேர்ந்தவர் ராசு.

இவரது மகள் போதுமணி(வயது28). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் கைவிட்டு விட்டார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சவரிமுத்து மகன் ஜோசப் (33) என்பவரை போதுமணி கலப்புத்திருமணம் செய்து கொண்டார். இது அவரது அக்கா பிச்சைமணியின்கணவர் அய்யப்பன் மற்றும் அவரது மகன் விக்னேஷ் (21) ஆகியோருக்கு பிடிக்க வில்லை.

எனவே இருவரும் போதுமணியிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் பிச்சைமணி கோபித்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அய்யப்பன் மற்றும் அவரது மகன் விக்னேஷ் ஆகிய இருவரும் போதுமணியின் வீட்டிற்குள் புகுந்து அவரை அவதூறாக பேசியுள்ளனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அப்போது விக்னேஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போதுமணி மற்றும் அவரது கணவர் ஜோசப்பை சரமாரியாக வெட்டினார். அய்யப்பன் இரும்பு கம்பியால் தாக்கினார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த தம்பதியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதுதொடர்பாக போதுமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அய்யப்பனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Next Story