முல்லைப்பெரியாற்றில் இருந்து 18-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
முல்லைப்பெரியாற்றில் இருந்து 18-ம் கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கூடலூர்,
உத்தமபாளையம் தாலுகா மற்றும் போடி தாலுகாவில் உள்ள கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், டி.மீனாட்சிபுரம், சிந்தலைச்சேரி, சங்கராபுரம் ஆகிய பகுதிகள் ்பாசன வசதி பெறும் வகையில் 18-ம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கூடலூரை அடுத்துள்ள லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையம் அருகே முல்லைப்பெரியாற்றில் தடுப்பணை கட்டப்பட்டு 18-ம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
உத்தமபாளையம் தாலுகாவில் 10 கிராம பகுதிகளில் உள்ள 29 கண்மாய்கள், போடி தாலுகாவில் 3 கிராமங்களில் உள்ள 15 கண்மாய்கள் என மொத்தம் 44 கண்மாய்களில் தண்ணீர்் தேக்கப்பட்டு 4 ஆயிரத்து 614 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் வகையில் இந்த 18-ம் கால்வாய் திட்டம் அமைக்கப்ட்டது.
இந்த கால்வாயில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு முல்லைப்பெரியாறு அணை நீர்்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று அணையின் நீர்்மட்டம் 135.15 அடியாக காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 961 கன அடி நீர்்வரத்து காணப்படுகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி நீர்் வெளியேற்றப்படுகிறது, அணையில் 5 ஆயிரத்து 904 மில்லியன் கன அடி நீர்் இருப்பு உள்ளது.
முல்லைப்பெரியாற்றில் 5.2 மில்லி மீட்டரும், தேக்கடியில் 3.6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் ஒரு வாரத்திற்குள் அணையின் உச்சபட்ச நீர்மட்டமான 142 அடியை தொட்டு விடும் நிலை உள்ளது.
எனவே 18-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story