லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி: அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல மாற்று ஏற்பாடு, கலெக்டர் நடவடிக்கை
லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலியாக தேனி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறினார்.
தேனி,
நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் 3-வது நாளாக நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் சுமார் 4,500 லாரிகள் கடந்த 3 நாட்களாக இயக்கப்படவில்லை.
இதனால் சுமார் ரூ.60 கோடி மதிப்பிலான பொருட்கள் தேங்கி உள்ளன. போடி பகுதியில் ஏலக்காய், காபி, சின்னமனூர், கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் திராட்சை, வாழை பழங்கள், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு பகுதிகளில் தேங்காய் போன்ற விளை பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. வடுகப்பட்டியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளைப் பூண்டுகள் தேக்கம் அடைந்துள்ளன. மேலும் நூற்பாலை, பஞ்சாலை, எண்ணெய் ஆலைகள், பருப்பு ஆலைகளில் பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான காய்கறிகள் கொண்டு செல்லப்படுவது வழக்கம். அதுவும் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.60 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.
இந்நிலையில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அரசு பஸ்கள் மூலம் கொண்டு செல்லப்படும்.
மாவட்டத்தில் மினி வேன்கள் மூலம் கொண்டு செல்லப்படும் எரிவாயு சிலிண்டர்கள், ரேஷன் பொருட்கள், பால், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை தடை செய்ய முயற்சிக்க கூடாது. அரசு பஸ்களில் விவசாயம் சார்ந்த நுகர்பொருட்களை எவ்வித கட்டணமும் இன்றி கொண்டு செல்லலாம். தனியார் பஸ்களில் கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கு கூடுதல் கட்டணம் கேட்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், லாரி உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட லாரி உரிமையாளர்கள், கலெக்டரிடம் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.
Related Tags :
Next Story