வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்: தனியார் மில் பஸ்களை சிறைபிடித்து உறவினர்கள் போராட்டம்


வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்: தனியார் மில் பஸ்களை சிறைபிடித்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 23 July 2018 5:45 AM IST (Updated: 23 July 2018 5:32 AM IST)
t-max-icont-min-icon

வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானதால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் தனியார் மில் பஸ்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

வடமதுரை,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் தனியார் மில் செயல்பட்டு வருகிறது. இந்த மில்லில் வடமதுரை, அய்யலூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி, கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களை அழைத்து வருவதற்காக மில் நிர்வாகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள தண்டல்காரனூரை சேர்ந்த விஜயலட்சுமி (வயது 27) என்ற பெண் இந்த மில்லில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மில்லுக்கு வேலைக்கு சென்ற விஜயலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், நேற்று காலை பெண் பணியாளர் களை அழைத்து செல்வதற்காக வந்த தனியார் மில்லின் 3 பஸ்களை, பொன்னம்பலப்பட்டி சுங்கச்சாவடி அருகே சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இளம்பெண் மாயமானது குறித்து வடமதுரை போலீசில் புகார் அளிக்குமாறு அவர்களிடம் வலியுறுத்தினர். இதையடுத்து அவர்கள் மில் பஸ்களை விடுவித்தனர். இதுகுறித்து விஜயலட்சுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story