கன்னியாகுமரியில் கடல் சீற்றம் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து


கன்னியாகுமரியில் கடல் சீற்றம் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து
x
தினத்தந்தி 24 July 2018 4:30 AM IST (Updated: 23 July 2018 8:32 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் கடல் சீற்றத்தால், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

கன்னியாகுமரி,

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்கள் காலையில் சூரிய உதயத்தை கண்டுகளித்து, காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம் ஆகியவற்றை பார்வையிட்டு மகிழ்வார்கள். மேலும், கடலில் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிடுவார்கள். முக்கடல் சங்கமத்தில் நீராடி, பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து, சிறுவர் பூங்கா, கடற்கரை பூங்கா போன்றவற்றில் விளையாடி குதூகலத்துடன் வீடு திரும்புவார்கள்.

இந்தநிலையில், நேற்று காலையில் கன்னியாகுமரியில் பயங்கர கடல்சீற்றம் ஏற்பட்டது. இந்திய பெருங்கடல், அரபிக்கடல் பகுதிகளில் ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி வேகமாக வந்து பாறைகளின் மீது மோதி சிதறின.


இதையடுத்து முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா போலீசார் ரோந்து சென்று யாரும் கடலில் இறங்காதவாறு கண்காணித்தனர்.

அதே நேரத்தில் விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ள பகுதியில் கடல் இயல்பாக காணப்பட்டது. இதையடுத்து காலை 8 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு வழக்கம்போல் படகு போக்குவரத்து தொடங்கியது. ஆனால், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நேற்று முழுவதும் ரத்து செய்யப்பட்டது.


கடல் சீற்றம் காரணமாக கோவளம், மணக்குடி, வாவாத்துறை போன்ற பகுதிகளில் கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்தனர். இதனால், அந்தபகுதிகளில் சந்தைகளில் மீன்வரத்து குறைந்தது.

Next Story