பக்கிங்காம் கால்வாயில் உள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும்


பக்கிங்காம் கால்வாயில் உள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 24 July 2018 4:30 AM IST (Updated: 23 July 2018 11:09 PM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூர் மேற்கு பகுதிகளையொட்டிய பக்கிங்காம் கால்வாயில் உள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவொற்றியூர்,

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட மேற்கு பகுதிகளான 4, 5 மற்றும் 6– வது வார்டுகளில் சத்தியமூர்த்தி நகர், ஜோதிநகர், கார்கில் நகர், முல்லை நகர் உள்ளிட்டவை உள்ளன. இந்த ஊர்களையொட்டி பக்கிங்காம் கால்வாய் செல்கிறது.

இந்த கால்வாயில் ஏராளமான ஆகாய தாமரை செடிகள் படர்ந்து கிடக்கின்றது. கால்வாயில் செல்லும் தண்ணீரை ஆகாய தாமரைகள் முழுவதுமாக மூடியிருப்பதால் அக்கம் பக்கத்தில் இருந்து அடித்து வரப்படும் குப்பை மற்றும் கழிவுகள் ஒரே இடத்தில் தேங்கிவிடுகிறது.

இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் பூச்சிகளும், வண்டுகளும் இரவு நேரங்களில் படையெடுத்து வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன.

இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையான நோய்களுக்கு உள்ளாவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவு நீர், கால்வாயில் கலந்து, தேங்கி நிற்பதால் பல நேரங்களில் கண் எரிச்சல் போன்றவை ஏற்படுகின்றது. கொசு தொல்லையும் அதிகரித்து உள்ளது.

விரைவில் மழைக்காலம் தொடங்க இருக்கிறது. மழைக்காலங்களில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்து கிடந்தால் பக்கிங்காம் கால்வாய் வழியாக செல்லும் மழைநீர் வெள்ளம் திருவொற்றியூர் மேற்கு பகுதிகளில் புகும் அபாயம் உள்ளது.

எனவே மழை வருவதற்கு முன்பு பக்கிங்காம் கால்வாயில் உள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்றி தண்ணீர் வழிந்தோட வகை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story