கார் மீது வெடிகுண்டுகளை வீசி அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை


கார் மீது வெடிகுண்டுகளை வீசி அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 24 July 2018 4:45 AM IST (Updated: 24 July 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில், காரில் நாட்டு வெடிகுண்டுகளை அடுத்தடுத்து வீசி அ.தி.மு.க. பிரமுகரை மர்ம கும்பல் வெட்டிக்கொன்று விட்டு தப்பிச்சென்றது. இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா எடமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு(வயது 47). இவர், கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. மாணவர் அணி துணை செயலாளராகவும், முதல்நிலை ஒப்பந்தக்காரராகவும் இருந்து வந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளாக சீர்காழி தென்பாதி திரிபுரசுந்தரி நகரில் சொந்த வீட்டில் தனது சகோதரர் சின்னபாபு என்கிற சீனுவாசன் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

நேற்று காலை 11.30 மணியளவில் ரமேஷ்பாபு, பிடாரி வடக்கு வீதியில் உள்ள ஒப்பந்தக்காரர் ஒருவரது வீட்டிற்கு காரில் சென்றார். காரை டிரைவர் இளவரசன்(25) ஓட்டிச் சென்றார். அங்கு சென்ற ரமேஷ்பாபு அந்த ஒப்பந்தக்காரரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வீட்டில் இருந்து வெளியே நிறுத்தப்பட்டு இருந்து தனது காருக்கு வந்தார்.

அப்போது அங்கு திடீரென ஒரு கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வேகமாக வந்தது. அந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தது. அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் தாங்கள் வைத்து இருந்த மூன்று நாட்டு வெடிகுண்டுகளை ரமேஷ்பாபுவின் கார் மீது அடுத்தடுத்து வீசினர்.

மர்ம கும்பல் வீசிய 3 குண்டுகளும் அதிபயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. குண்டுகள் வெடித்ததில் அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. நிலைமை விபரீதமாகிவிட்டதை உணர்ந்த ரமேஷ்பாபு உயிர் தப்பிக்க எண்ணி காரை விட்டு இறங்கினார்.

இதை பயன்படுத்திக்கொண்ட அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் கார் கதவு அருகிலேயே ரமேஷ்பாபுவை தாங்கள் வைத்து இருந்த அரிவாளால் சர மாரியாக வெட்டினர். இதில் ரமேஷ்பாபுவுக்கு தலை, தோள்பட்டை, கை போன்ற இடங்களில் பயங்கர வெட்டு விழுந்தது. இதில் ரமேஷ்பாபு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

குண்டு வெடித்ததும் டிரைவர் இளவரசன் உயிர் தப்பிக்க காரில் இருந்து இறங்கி ஒப்பந்தக்காரர் வீட்டிற்குள் ஓடி விட்டார். பட்டப் பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தை பார்த்து அந்த பகுதி வழியாக சென்றவர்கள் சத்தம் போட்டுக்கொண்டு அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

ரமேஷ்குமாரை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல் பின்னர் தாங்கள் வந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக் சஞ்சய், துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட ரமேஷ்பாபுவின் உடலையும், கொலை நடந்த இடத்தையும் பார்வையிட்டு அந்த பகுதியில் இருந்தவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரனை நடத்தினர். பின்னர் ரமேஷ்பாபுவின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ரமேஷ்பாபு கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது மனைவி சுஜா, சகோதரர் சீனுவாசன் மற்றும் குடும்பத்தினர் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரமேஷ்பாபுவின் உடலை பார்த்து கதறி அழுதனர். அ.தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள், ரமேஷ்பாபுவின் நண்பர்கள், அவரது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் என ஏராளமானோர் சம்பவ இடத்தில் குவிந்தனர்.

இதனால் பிடாரி வடக்கு வீதி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து நாகையில் இருந்து வெடிகுண்டு நிபுனர்கள் மற்றும் போலீஸ் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரமேஷ்பாபுவின் உடல் வைக்கப்பட்டு உள்ள சீர்காழி அரசு மருத்துவமனையில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ்பாபுவின் கொலைக்கான காரணம் என்ன? அரசியல் ரீதியாக இந்த கொலை நடந்ததா? தொழில் போட்டி காரணமா? அல்லது முன்விரோதம் காரணமாக ரமேஷ்பாபுவை யாரேனும் கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டினார்களா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

படுகொலை செய்யப்பட்ட ரமேஷ்பாபுவிற்கு சுஜா என்ற மனைவியும், வர்ஷா என்ற மகளும், ஹர்ஷவரதன் என்ற மகனும் உள்ளனர்.

நாட்டு வெடிகுண்டு வீசி, அ.தி.மு.க. பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story