சிறுவனையும், வாகனங்களையும் தூக்கி சென்ற திருநங்கையர்கள்


சிறுவனையும், வாகனங்களையும் தூக்கி சென்ற திருநங்கையர்கள்
x
தினத்தந்தி 24 July 2018 3:15 AM IST (Updated: 24 July 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

திருநங்கையாக மாற செலவு செய்த பணத்தை தரக்கோரி சிறுவனையும், வாகனங்களையும் தூக்கி சென்ற திருநங்கையர்கள் போலீஸ் நிலையத்தில் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

ஆவடி,

ஆவடி காமராஜர் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். நகராட்சி துப்புரவு தொழிலாளி. இவருடைய மகன் பெருமாள் (வயது 19).

பெருமாள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது சித்ரா என்ற திருநங்கையிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சில ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தை விட்டு பிரிந்து குன்றத்தூரை அடுத்த கெழுத்திபேட்டையில் உள்ள திருநங்கையர்களுடன் வாழ்ந்து வந்தார். அப்போது திருநங்கையர்கள் பணம் செலவு செய்து பெருமாளுக்கு அறுவை சிகிச்சை செய்து ‘ராஜி’ யாக மாற உதவினர்.

இந்த தொகையை திருப்பி தருமாறு ராஜியாக மாறிய பெருமாளிடம் வற்புறுத்தினர். இதனால் சில நாட்களுக்கு முன் ராஜி அவர்களிடமிருந்து தலைமறைவானார்.

இதனால் ஆத்திரமடைந்த திருநங்கையர்கள், ராஜியின் சகோதரரான 16 வயது சிறுவனை 21-ந் தேதி அவர்களுடன் அழைத்து சென்றனர். மேலும் ராஜியின் வீட்டுக்கு சென்று இரு சக்கர வாகனம், அவருடைய உறவினரின் ஆட்டோ ஆகியவற்றை ராஜி வந்தால் தான் திருப்பி தருவதாக கூறி தூக்கி சென்றனர்.

இது குறித்து ஆவடி போலீசில் வெங்கடேஷ் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விமலநாதன், திருநங்கையர்களை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் சிறுவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து ராஜிக்கு செலவு செய்த பணத்தை தந்தால் தான் வாகனங்களை தருவோம் என கூறி திருநங்கையர்கள் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் ஆவடி போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story