போலீசாரை கண்டித்து கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்


போலீசாரை கண்டித்து கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 24 July 2018 4:15 AM IST (Updated: 24 July 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

போலீசாரை கண்டித்து திருவாரூர் திரு.வி.க. கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் தாலுகா போலீசார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து இந்திய மாணவர் சங்க நிர்வாகி தெட்சிணாமூர்த்தியை கைது செய்தனர். இதை கண்டித்து திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் தரையில் அமர்ந்து மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஹரிசுர்ஜித் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பிரகாஷ் கலந்து கொண்டு பேசினர். இதில் கிளை தலைவர் சிவபாலன், கிளை செயலாளர் ஜோஸ்வா உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தெட்சிணாமூர்த்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கல்லூரி செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் பிரகாஷ், மாவட்ட செயலாளர் ஹரிசுர்ஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story