பழனி அருகே 16–ம் நூற்றாண்டை சேர்ந்த செப்பேடு கண்டுபிடிப்பு


பழனி அருகே 16–ம் நூற்றாண்டை சேர்ந்த செப்பேடு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 24 July 2018 4:30 AM IST (Updated: 24 July 2018 4:07 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே 16–ம் நூற்றாண்டை சேர்ந்த செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரையில் சிறை வைக்கப்பட்ட பெண்களை மீட்டவருக்கு அந்த செப்பேடு எழுதி கொடுக்கப்பட்டுள்ளது.

பழனி,

அரசியல் காரணங்களுக்காகவும், பிற காரணங்களுக்காகவும் பெண்களை சிறை பிடிக்கும் சம்பவங்கள் யுக, யுகமாக நடக்கிறது. திரேதா யுகத்தில் கூட சீதையை, ராவணன் சிறை பிடித்த சம்பவம் ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பகை மன்னர்களின் குடும்ப பெண்களை சிறை பிடித்தது பற்றிய செய்திகளை சோழ மன்னர்களின் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் நாம் காணலாம். மாமன்னர் திப்புசுல்தானின் குடும்ப பெண்களை கூட ஆங்கிலேயர்கள் சிறைபிடித்து வேலூர் கோட்டையில் அடைத்து வைத்திருந்ததாக வரலாறு கூறுகிறது.

அதுபோன்ற ஒரு நிகழ்வை தாங்கிய செப்பேடு பழனி அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள பழமையான வீட்டில் பழனி தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்திக்கு கிடைத்தது. பழங்கால இரும்பு பெட்டிக்குள் துணியால் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த செப்பேடு குறித்து அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு அவ்வளவாக விவரங்கள் எதுவும் தெரியவில்லை. வீட்டை சுத்தப்படுத்தும் போது கிடைத்ததாக கூறி தொல்லியல் ஆய்வாளரிடம் கொடுத்துள்ளனர். செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:–

செப்பேட்டின் முகப்பில் சூரியசந்திர வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த வகையான வடிவங்கள் கி.பி. 16–ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டவை ஆகும். எனவே இந்த செப்பேடு கி.பி. 16–ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பது தெளிவாகிறது. இந்த செப்பேடு 44 சென்டி மீட்டர் உயரமும், 22 சென்டி மீட்டர் அகலமும் கொண்டதாகும். நீண்ட காலம் ஆனதால் இந்த செப்பேடு இரண்டாக உடைந்துள்ளது. செப்பேட்டில் எழுதப்பட்டுள்ள விவரங்கள் 2 பகுதிகளாக பிரித்து எழுதப்பட்டுள்ளது. முதல் பகுதியில் 115 வரிகளும், 2–ம் பகுதியில் 60 வரிகளும் இடம்பெற்றுள்ளன.

கி.பி. 16–ம் நூற்றாண்டில் இருஞ்சோழ வளநாடு பகுதிகளை (தற்போதைய விருதுநகர் மாவட்ட பகுதிகள்) சங்குப்பிள்ளை என்பவர் குறுநில மன்னர் போல் ஆட்சி செய்து வந்துள்ளார். அவருக்கு இந்த செப்பேட்டை அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் எழுதி கொடுத்துள்ளனர். அன்றைய காலகட்டத்தில் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் தளபதியாக இருந்து புகழ்பெற்ற அரியநாத முதலியார் குறித்த பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் இந்த செப்பேட்டில் இடம்பெற்றுள்ளன.

விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயரின் கணக்காளராகவும், உப தளபதியாகவும் இருந்த அரியநாத முதலியார் தான் நாயக்க மன்னர்கள் மதுரையில் ஆட்சியை பிடிக்க ஆணிவேராக செயல்பட்டுள்ளார். மேலும் தொடர்ச்சியாக 3 நாயக்க மன்னர்களின் உப தளபதியாகவும், தளபதியாகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவர், கி.பி. 1551–ம் ஆண்டு சங்குப்பிள்ளை ஆட்சி செய்த வடபட்டி என்ற ஊரை தனது படைகளுடன் சென்று முற்றுகையிட்டு அங்கிருந்து 2 பெண்களையும், ரெண்டப்புலி என்ற பகுதியை முற்றுகையிட்டு அந்த பகுதியை சேர்ந்த 3 பெண்களையும் சிறை பிடித்துள்ளார். பின்னர் அந்த பெண்களை மதுரைக்கு அழைத்து வந்து சிறை வைத்துள்ளார்.

முன்னதாக கி.பி.1550–ம் ஆண்டு நாயக்க மன்னர்களின் மற்றொரு உப தளபதியான அண்ணாமலை நாயக்கர் என்பவர், மன்னார்கோட்டை பகுதியை முற்றுகையிட்டு அங்கிருந்த 3 பெண்களை சிறை பிடித்து மதுரையில் கைதிகளை அடைத்து வைக்கும் கோட்டையில் அவர்களை சிறை வைத்தார்.

இதுகுறித்து அறிந்த சங்குப்பிள்ளை ஊர் மானத்தை காக்கவும், பெண்களின் மானத்தை காக்கவும் தமது ஆட்களை மதுரைக்கு அனுப்பி சிறை வைக்கப்பட்டிருந்த 8 பெண்களையும் 880 பொற்காசுகளை கொடுத்து மீட்டுள்ளார் என்ற தகவல் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சிறை வைக்கப்பட்ட பெண்களின் பெயர்களை குறிப்பிடாமல் இன்னார் மகள், இன்னார் சகோதரி என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த காலகட்டத்திலேயே பெண்களின் மானத்தை காப்பாற்றுவதற்காக அவர்களின் பெயர் விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன என்பது தெரியவருகிறது.

தங்கள் வீட்டு பெண்களை மீட்டுக்கொடுத்த சங்குப்பிள்ளைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் சோலையழகன் என்பவர் மூலம் இந்த செப்பேட்டை எழுதி சங்குப்பிள்ளைக்கு வழங்கியுள்ளனர்.

செப்பேட்டில் பெண்களை மீட்ட விவரங்கள் மட்டுமின்றி கோடி, கோடி வருடங்களுக்கு குறிப்பிட்ட சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் சங்குப்பிள்ளைக்கு கடன்பட்டிருப்பதாகவும், தங்கள் வீட்டில் திருமண நிகழ்ச்சி நடத்தினால் மணமகன், மணமகள் சார்பில் தலா ஒரு பணமும், தலைக்கட்டுக்கு ஒரு பணமும், தீமைக்கு (இறப்புக்கு) ஒரு பணமும் சங்குப்பிள்ளைக்கு வழங்கப்படும். திருமணம் நிச்சயமான மணமக்களை சங்குப்பிள்ளை முன்பு நிறுத்தி அவர் அனுமதி அளித்தால் மட்டுமே அவர்களுக்கு திருமணம் நடத்தப்பட வேண்டும். இந்த சம்பிரதாயங்களை மீறுபவர்கள் ஊரைவிட்டு விலக்கி வைப்பதுடன் சங்குப்பிள்ளை செலவழித்த 880 பொற்காசுகளை அவருக்கு சம்பந்தப்பட்ட நபர் திருப்பி கொடுக்க வேண்டும் என செப்பேட்டின் முதல் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்பேட்டின் 2–ம் பகுதியில் சங்குப்பிள்ளையை பகைத்துக்கொண்ட ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்த விவரங்களும், பின்னர் அந்த நபரை ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி சங்குப்பிள்ளை அனுமதியுடன் தண்டனை ரத்து செய்யப்பட்ட விவரங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் மதுரையில் சிறை வைக்கப்பட்ட பெண்களை மீட்கச்சென்ற போது, அவர்களை அடைத்து வைத்திருந்த கோட்டையின் பிரதான காப்பாளனான சாப்பய்யன் என்பவருக்கு தனிப்பட்ட முறையில் 100 பொற்காசுகளை லஞ்சமாக கொடுத்து கோட்டைக்குள் செல்ல அனுமதி பெற்ற விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

செப்பேடு கிடைத்த வீட்டில் வசித்தவர்களின் மூதாதையர்கள் விருதுநகர் மாவட்ட பகுதிகளில் வசித்து பின்னர் பழனி அருகே குடியேறி உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் தெரிவித்தார்.

பழனி அருகே கண்டுபிடிக்கப்பட்ட செப்பேட்டில் மதுரை நாயக்க மன்னர்களுக்கு உபதளபதியாக இருந்த அரியநாத முதலியார் குறித்து மேலும் சில தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அதில் அரியநாத முதலியார் தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தை கட்டியவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாளையக்காரர்கள் (ஜமீன்தார்) முறையை தோற்றுவித்தவரும் இவரே என்ற தகவலும் அந்த செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story