நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அமித்ஷா தீவிர ஆலோசனை


நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அமித்ஷா தீவிர ஆலோசனை
x
தினத்தந்தி 24 July 2018 4:20 AM IST (Updated: 24 July 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து பா.ஜனதா தலைவர் அமித்ஷா கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

மும்பை, 

பா.ஜனதா தலைவர் அமித்ஷா அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று அங்குள்ள மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தவகையில் அவர் மராட்டிய மாநிலத்திற்கு வருகை தந்தார். அமித்ஷா நேற்று முன்தினம் மும்பை தாதரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மற்றும் மராட்டிய சட்டமன்ற தேர்தலை தனியாக சந்திக்க தயாராக இருக்குமாறு நிர்வாகிகளை அறிவுறுத்தி உள்ளார். மேலும் அவர் மராட்டியத்தில் உள்ள 48 நாடாளுமன்ற, 288 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.

இதேபோல முதல் தலைமுறை வாக்காளர்களை எப்படி கவர வேண்டும் என்பது குறித்தும் அவர் பேசியுள்ளார். இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், பா.ஜனதா மாநில தலைவர் ராவ்சாகிப் தன்வே உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பாடகியுடன் சந்திப்பு

இதுதவிர அமித்ஷா மத்திய மந்திரி நிதின் கட்கரி, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ராவ்சாகிப் தன்வே, மாநில நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார், சந்திரகாந்த் பாட்டீல், பங்கஜா முண்டே ஆகியோர் அடங்கிய நாடாளுமன்ற பிரதிநிதி குழுவினரிடமும் ஆலோசனை நடத்தினார்.

இதன்பிறகு அமித்ஷா பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரை அவரது வீட்டில் சந்தித்தார். அமித்ஷாவுடன் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ராவ்சாகிப் தன்வே, மும்பை தலைவர் ஆஷிஸ் செலார் ஆகியோரும் சென்று இருந்தனர்.

இந்த சந்திப்பின் போது அமித்ஷா, லதா மங்கேஷ்கருக்கு மோடி அரசின் 4 ஆண்டு கால ஆட்சியின் சாதனை புத்தகத்தை பரிசளித்தார்.

Next Story