லாரிகள் வேலை நிறுத்தத்தால் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்த பொருட்கள் தேக்கம், தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்


லாரிகள் வேலை நிறுத்தத்தால் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்த பொருட்கள் தேக்கம், தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்
x
தினத்தந்தி 24 July 2018 4:33 AM IST (Updated: 24 July 2018 4:33 AM IST)
t-max-icont-min-icon

லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தால் திருபுவனை, சேதராப்பட்டு பகுதி தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்த பொருட்கள் தேக்கமடைந்து உள்ளன.

திருபுவனை,

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக்கட்டணம் வசூலிக்க வேண்டும். 3–ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 20–ந் தேதி முதல் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு புதுச்சேரி லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனால் புதுவை மாநிலத்தை சேர்ந்த பெரும்பாலான லாரிகள் ஓடவில்லை. இந்த போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு சுமார் 150 கோடி ரூபாய் வர்த்தகம் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வேலைநிறுத்தம் நேற்று 4–வது நாளாக நீடித்தது. புதுவையில் லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக விவசாய விளை பொருட்கள் ஏற்றிச்செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து புதுவைக்கு வரும் காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்த பொருட்கள் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உள்ளது.

புதுவை மாநிலத்தில் திருபுவனை, சன்னியாசிக்குப்பம், திருவண்டார்கோவில், கலித்தீர்த்தாள்குப்பம், மகதடிப்பட்டு, சேதராப்பட்டு, கரசூர், துத்திப்பட்டு, தட்டாஞ்சாவடி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் அதிகளவில் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு கார் உதிரி பாகங்கள், கம்ப்யூட்டர் பாகங்கள், பிஸ்கெட் கம்பெனி, மின்சார கம்பி தயாரிக்கும் தொழிற்சாலை, பேக்கிங் எந்திரம் உற்பத்தி தொழிற்சாலை, வாஷிங் மிஷின், பிரிட்ஜ், ஏ.சி. தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் பிற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் என 500–க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அளவிலான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் லாரிகளின் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த 3 நாட்களாக உற்பத்தி செய்த பொருட்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் தொழிற்சாலையிலேயே தேக்கம் அடைந்துள்ளது. இதேபோல் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் வருவதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், உற்பத்தி பாதிக்கும் நிலை உள்ளது.

லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்ந்தால் 100–க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story