சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்ட மேலும் 2 வாலிபர்கள் போலீசில் சிக்கினர்


சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்ட மேலும் 2 வாலிபர்கள் போலீசில் சிக்கினர்
x
தினத்தந்தி 24 July 2018 5:30 AM IST (Updated: 24 July 2018 4:33 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்ட மேலும் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருக்கனூர்,

புதுவையை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, வழுதாவூரை சேர்ந்த வாலிபர் திருக்கனூர் பகுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதை தனது செல்போனில் படம் எடுத்து வைத்துக்கொண்டு அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, அந்த சிறுமியை ஒரு வீட்டில் அடைத்து வைத்து தனது நண்பர்கள் 7 பேருக்கு அந்த வாலிபர் விருந்தாக்கினார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா உத்தரவிட்டார். அதன்பேரில் திருக்கனூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

கொடாத்தூரை சேர்ந்த கண்ணதாசன், முகிலன் உள்பட 8 பேர் சேர்ந்து அந்த சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். திருக்கனூர் பகுதியில் பதுங்கியிருந்த முகிலன், கண்ணதாசன், சூர்யபிரகாஷ் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட 2 சிறுவர்களை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த 3 பேரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தேடப்பட்ட 2 வாலிபர்கள் நேற்று போலீசாரின் பிடியில் சிக்கினர். சிறுமி கற்பழிப்பு வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை 2 குழுவாக காட்டேரிக்குப்பம், திருக்கனூர் போலீஸ் நிலையங்களில் வைத்து போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் மேற்பார்வையில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சிறுமியை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் சித்தலம்பட்டு, வழுதாவூர் கிராமங்களுக்கு கைது செய்யப்பட்ட 7 பேரையும் போலீசார் அழைத்துச்சென்றனர். அங்கு சிறுமியை கூட்டாக பலாத்காரம் செய்த இடங்களை அவர்கள் காண்பித்தனர். அப்போது கிராம நிர்வாக அலுவலர்கள் ஏழுமலை, இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்.

இதன்பின்னர் அவர்கள் 7 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துவந்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் துரவி கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் போலீசார் நெருங்குவதை அறிந்து சென்னைக்கு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. அவரை பிடிக்க போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.


Next Story