அழிவின் விளிம்பில் 3 உயிரினங்கள்


அழிவின் விளிம்பில் 3 உயிரினங்கள்
x
தினத்தந்தி 24 July 2018 11:13 AM IST (Updated: 24 July 2018 11:13 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சோலைமந்தி, கருமந்தி, வரையாடு ஆகிய உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 1000 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பிரதேசங்களில், மூன்று வெகு அரிய காட்டு உயிரினங்களை காணலாம். சோலைமந்தி (சிங்கவால் குரங்கு) மழைக்காட்டில் மரத்தின் உச்சியிலேயே இருக்கும். மழைக்காடுகளுக்கு அருகில் உள்ள இலையுதிர் காடுகளில் சோலைமந்தியை விட உருவில் சற்றுப் பெரிய கருமந்திகளை காணலாம். மழைக்காட்டை ஒட்டியுள்ள புல்வெளிப் பகுதிகள் வரையாடு போன்ற உயிரினங்களுக்கு வாழிடம்.

பரிணாம வளர்ச்சியில் மழைக்காட்டில் வாழும்படியான தகவமைப்புடன் உருவாகியுள்ள உயிரி சோலைமந்தி. மரங்களின் உயரத்தில் இது இரை தேடும். வெகு அரிதாகவே தரைக்கு வரும். தோட்ட பயிர்களுக்காகவும், மரங்களை வெட்டியதாலும், அணைகள் கட்டியதாலும் இவற்றின் வாழிடமான மழைக்காடுகள் பெரும் அளவில் அழிக்கப்பட்டுவிட்டன. உறைவிடம் போனதல்லாமல், நாட்டு வைத்தியத்துக்காகவும், தோலுக்காகவும் சோலைமந்திகள் கொல்லப்பட்டன. இன்று ஆனைமலை, களக்காடு சரணாலயங்களில் சிறு, சிறு தீவுகள் போல் எஞ்சியுள்ள வாழிடங்களில், சோலைமந்திகள் அழிவின் விளிம்பில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பிழைத்திருக்கின்றன.

நீண்ட வால் கொண்ட கருமந்தி, மரத்துக்கு மரம் தாவிக் குதிக்கும். 30 ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையோரம் உள்ள காடுகளிலேயே, இவற்றின் சிறு கூட்டங்களைக் காண முடிந்தது. அந்தக் காலத்தில் முரசு கொட்டுவதைப் போன்று இவை எழுப்பும் ஒலியை அடிக்கடி கேட்கலாம். நாட்டு மருந்துக்காக பெருமளவில் கொல்லப்பட்டதால் இன்று இவையும் அரிதாகிவிட்டன.

தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடுகளை மழைக்காடுகளுக்கு அருகில் காணலாம். இந்தக் காட்டாடு மலை முகடுகளில், பாறைகளில் வெகு எளிதாகத் தாவிச் செல்லும். மந்தைகளாக வாழும் வரையாடுகளை அதன் இறைச்சிக்காக வேட்டையாடினார்கள். சாகச வேட்டையாடிகளுக்கு வரையாட்டைச் சுடுவது பெருமை தரும் ஒரு காரியமாக இருந்தது.

அதிலும் முதுகில் பழுப்பு வெள்ளைப் பரப்புக் கொண்ட முதிர்ந்த ஆண் வரையாட்டைச் சுடுவது கூடுதல் முக்கியத்துவம் பெற்றது. வேட்டையாடிகள் என்று குறிப்பிட்டு, அதன் தோலை ஒரு விருதாக வைத்துக்கொள்வதற்காக கொன்றனர். இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்து, ஏறக்குறைய இல்லாமல்போகும் நிலைக்கு வந்துவிட்டன.

இன்றும் வரையாடுகள் வேட்டைக்கு பலியாகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் மட்டுமே வாழும் இந்த வரையாடுகளைத் தமிழ்நாட்டில் ஆனைமலை, களக்காடு சரணாலயங்களில் காண முடியும். அழிவின் விளிம்பின் ஊசலாடிக் கொண்டிருக்கும் இந்த மூன்று தமிழகக் காட்டுயிர்களும், நம் காடுகளின் குறியீடாக விளங்குகின்றன. அவற்றின் தற்போதைய நிலை நம் காடுகளின் பரிதாப நிலையை பிரதிபலிக்கிறது. 

Next Story