சொரிமுத்து அய்யனார் கோவிலில் 11-ந் தேதி ஆடி அமாவாசை திருவிழா: முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்


சொரிமுத்து அய்யனார் கோவிலில் 11-ந் தேதி ஆடி அமாவாசை திருவிழா: முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 24 July 2018 3:56 PM IST (Updated: 24 July 2018 3:56 PM IST)
t-max-icont-min-icon

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது.

நெல்லை, 

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. விழாவிற்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் ஆண்டுதோறும் வருகை தருவதாலும், பல்வேறு பக்தர்கள் இரவு முழுவதும் அங்கேயே தங்குவதாலும் அவர்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி மற்றும் விக்கிரமசிங்கபுரம் நகரசபை மூலம் ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.

தற்காலிக கழிப்பிடங்கள்

தற்காலிக கழிப்பிடங்களை அமைக்க வேண்டும். ஏற்கனவே கோவில் பகுதிகளில் உள்ள கழிப்பறைகளை பராமரிப்பு செய்திட வேண்டும். பெரிய அளவிலான குப்பை தொட்டிகளை வைத்திட வேண்டும். தினமும் விரைவாக குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

கோவிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு தற்காலிக வாகன நிறுத்துமிடங்களை அமைக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் வசதி மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களை அமைத்திட வேண்டும். கோவில் வளாக பகுதிகளில் பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த முற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த பகுதியில் அமைக்கப்படும் தற்காலிக கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி பெற வேண்டும்.

தற்காலிக கடைகளின் முன்பு கடையின் உரிமையாளர்கள் கண்டிப்பாக குப்பை கூடைகளை வைத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர்கள் ஆகாஷ் (சேரன்மாதேவி), மைதிலி (நெல்லை), சவுந்தரராஜ் (தென்காசி), கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்சோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story