கோவில்பட்டியில் புதிய டாஸ்மாக் கடையை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம் கட்சியினர் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடை முற்றுகை
கோவில்பட்டி மெயின் ரோடு மாலையம்மன் கோவில் எதிரில் நேற்று மதியம் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் முற்றுகையிட்டனர். நகர தலைவர் வேல்ராஜா, நகர செயலாளர் முனியராஜ், மாவட்ட செயலாளர் நாராயணன், தொகுதி செயலாளர் பாலு, ஒன்றிய செயலாளர்கள் குருசாமி, தினேஷ், வணிக வைசிய சங்க செயலாளர் பழனிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முற்றுகையிட்டவர்களிடம் தாசில்தார் பரமசிவன், கலால் துறை தாசில்தார் செல்லப்பாண்டியன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பவுல்ராஜ் (கிழக்கு), ஸ்டெல்லாபாய் (அனைத்து மகளிர்) மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது புதிய டாஸ்மாக் கடையை மாலையம்மன் கோவில் எதிரில் திறக்காமல், வேறு இடத்தில் திறக்க பரிந்துரைப்பதாக, கலால் துறை தாசில்தார் செல்லப்பாண்டியன் உறுதி அளித்தார். இதையடுத்து டாஸ்மாக் கடை திறக்கப்படாததால், பா.ஜ.க.வினர் கலைந்து சென்றனர்.
ஆர்ப்பாட்டம்
இதேபோன்று கோவில்பட்டி மெயின் ரோடு மாலையம்மன் கோவில் எதிரில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க கூடாது. கோவில்பட்டி மெயின் ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சியினர் நேற்று காலையில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
இதில், மாவட்ட செயலாளர் அன்புராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கிரி பாலா, ஒன்றிய செயலாளர்கள் பேச்சிமுத்து, மாடசாமி, கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கினர். மனுவை பெற்று கொண்ட அவர், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story