தென்காசி அருகே வாகன சோதனை கள்ள ரூபாய் நோட்டுகள் கத்தை, கத்தையாக சிக்கின; 2 பேர் கைது


தென்காசி அருகே வாகன சோதனை கள்ள ரூபாய் நோட்டுகள் கத்தை, கத்தையாக சிக்கின; 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 July 2018 3:30 AM IST (Updated: 24 July 2018 7:36 PM IST)
t-max-icont-min-icon

தென்காசி அருகே போலீசாரின் வாகன சோதனையில் கத்தை, கத்தையாக கள்ள ரூபாய் நோட்டுகள் சிக்கின. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி, 

தென்காசி அருகே போலீசாரின் வாகன சோதனையில் கத்தை, கத்தையாக கள்ள ரூபாய் நோட்டுகள் சிக்கின. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை 

நெல்லை மாவட்டம் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்–இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி தாஸ் மற்றும் போலீசார் நேற்று காலை தென்காசியை அடுத்த குத்துக்கல்வலசையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை போலீசார் வழிமறித்து சோதனை நடத்தினர்.

கத்தை, கத்தையாக கள்ளநோட்டுகள் 

அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் கத்தை, கத்தையாக கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது. அதில் ரூ.2000, ரூ.500, ரூ.200, ரூ.100 கள்ளநோட்டுகள் இருந்தன. இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று, போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் 12–ம் தெருவை சேர்ந்த சலீம் மகன் முகமது ரபீக் (வயது 23), கடையநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜப்பா மகன் சுப்பிரமணியன் (23) என்பது தெரியவந்தது.

சுற்றுலா பயணிகளிடம்... 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கரன்கோவிலில் கள்ளநோட்டு கும்பல் பிடிபட்டது. அந்த கும்பலை சேர்ந்த அசன் கானிடம் இருந்து கள்ளநோட்டுகளை இவர்கள் வாங்கி வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். தற்போது குற்றாலம் சீசன் என்பதால், அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட திட்டமிட்டு இருந்ததாகவும் கூறினர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கு கள்ள நோட்டுகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

தீவிர விசாரணை 

இந்த சம்பவம் குறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? வேறு எங்கேனும் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தென்காசி அருகே கள்ளநோட்டுகளுடன் 2 வாலிபர்கள் பிடிபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story