தியானம் செய்யாதவர்கள் வாழ்வெனும் தேனை சுவைக்க முடியாது நாஞ்சில் பி.சி. அன்பழகன் அறிவுரை


தியானம் செய்யாதவர்கள் வாழ்வெனும் தேனை சுவைக்க முடியாது நாஞ்சில் பி.சி. அன்பழகன் அறிவுரை
x
தினத்தந்தி 25 July 2018 4:15 AM IST (Updated: 24 July 2018 9:11 PM IST)
t-max-icont-min-icon

தியானம் செய்யாதவர்கள் வாழ்வெனும் தேனை சுவைக்க முடியாது என்று ஜேம்ஸ் பொறியியல் கல்லூரியில் நடந்த இலக்கிய விழாவில், நாஞ்சில் பி.சி. அன்பழகன் பேசினார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே உள்ள நாவல்காடு ஜேம்ஸ் பொறியியல் கல்லூரியில் இலக்கிய விழா நடந்தது. இதில் திரைப்பட இயக்குனரும், அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி. அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

 அப்போது அவர் கூறியதாவது:–

புதிரான வாழ்வின் விடையாக வந்ததே தியானம். தியானம் செய்யாதவர்கள் வாழ்வெனும் தேனை சுவைக்க முடியாது.

வானொலியை கண்டுபிடித்த மார்கோனி சிறுவயதில் இருந்த போது, ஒரு நாள் தன்னுடைய தந்தை ஜெபித்து கொண்டிருப்பதை பார்த்தார். அவர் தந்தையிடம், ‘இங்கு இருந்து நீங்கள் சொல்கிற ஜெபம் பக்கத்தில் இருக்கிற எனக்கே கேட்கவில்லை. அப்படியெனில் வானுலகில் இருக்கும் கடவுளுக்கு எப்படி கேட்கும்,’ என்று நகைச்சுவையாக கேட்டார்.

அதற்கு தந்தை என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மறுபடியும் முழங்கால் போட்டு, ‘ஆண்டவரே நீரே என் மகனுக்கு புரியவையும்’ என்று ஜெபித்துவிட்டு போய்விட்டார்.


பின்னர், மார்க்கோனி வானொலியை கண்டுபிடித்தபின்பு தன்னுடைய சொந்த ஊரில் நடந்த பாராட்டு விழாவில், சிறு வயதில் நடந்த நிகழ்வை கூறிவிட்டு ‘தந்தையிடம் நான் கேட்ட கேள்விக்கு ஆண்டவர் என் வழியாக எனக்கு பதில் சொல்லிவிட்டார். எப்படியெனில் நான் கண்டுபிடித்த இந்த வானொலியை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து கேட்கும் போது, பல கிலோ மீட்டர் தொலைவில் ஒலிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளை உடனே கேட்க முடிகிறது. சாதாரண ஆறு அறிவுள்ள மனிதனாகிய நான் கண்டு பிடித்த இந்த வானொலியே இப்படி கேட்கும் போது, என்னை படைத்த ஆண்டவர் நிச்சயமாக எனது தந்தை செய்த ஜெபத்தை கேட்பார்’ என்று கூறினார்.

ஆகையால், நம்முடைய தியானங்களையும், ஜெபங்களையும் கடவுள் கவனித்து கேட்கிறார் என்பதில் உறுதி கொண்டவர்களாக இருப்போம். அறிவாளிகளையும், முட்டாள்களையும் அவரவர் செயல்பாடுகளையும் ஒரே தட்டில் வைத்த நடுநிலையாக இறைவன் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், கல்லூரி மாணவ–மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story