சென்னையில் பல்வேறு இடங்களில் அபாயகரமான நிலையில் உள்ள மின் இணைப்பு பெட்டிகள்


சென்னையில் பல்வேறு இடங்களில் அபாயகரமான நிலையில் உள்ள மின் இணைப்பு பெட்டிகள்
x
தினத்தந்தி 25 July 2018 4:30 AM IST (Updated: 25 July 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பல்வேறு இடங்களில் அபாயகரமான நிலையில் மின் இணைப்பு பெட்டிகள் உள்ளன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை,

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு மின்சாரம் வழங்கும் வகையில், மின் இணைப்பு பெட்டிகள் தெருக்கள் ஓரமாக வைக்கப்பட்டுள்ளது. நுகர்வோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப இப்பெட்டிகள் உள்ளன.

மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய இந்த மின் இணைப்பு பெட்டிகள் முறையான பராமரிப்பு இல்லாமல் ஆபத்தை விளைவிக்கும் கருவி போன்று காட்சி அளிக்கிறது. பெட்டிகளின் கதவுகள் துருப்பிடித்தும், சேதமடைந்த நிலையிலும் உள்ளன. பெரும்பாலான மின் இணைப்பு பெட்டிகளில் மின்சார வயர்கள் இடியாப்ப சிக்கல் போன்று காணப்படுகின்றன.

அப்பெட்டிகளில் இருக்கும் மின் வயர்கள் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கின்றன. இது பார்ப்போரை பீதியடைய செய்கிறது. குறிப்பாக சிறு குழந்தைகள் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த பெட்டிகள் அனைவரிடத்திலும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர். நகரில் வீட்டு வாசல் முன் விளையாடிக் கொண்டிருந்த பாவனா, யுவஸ்ரீ என்ற இரண்டு சிறுமிகள் மின் இணைப்பு பெட்டியின் மின்சார வயர் நீரில் பட்டு மின்சாரம் பாய்ந்ததால் உயிரிழந்தனர்.

இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உடனடியாக அனைத்து மின் இணைப்பு பெட்டிகளும் சீரமைக்கப்படும் என்று மின்வாரியமும் உறுதி அளித்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.

தற்போது சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் விபரீதங்கள் நிகழாத வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சென்னை தண்டையார்பேட்டை வினோபாநகர் 10–வது தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டி, பெரம்பூர் மேட்டுப்பாளையம் அருந்ததி நகர் போன்ற பெரும்பாலான இடங்களில் இப்பெட்டிகள் அபாயகரமான நிலையிலேயே உள்ளன. எனவே முழுமையான ஆய்வு மேற்கொண்டு இப்பெட்டிகளை சீரமைக்க பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Next Story