கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 July 2018 3:45 AM IST (Updated: 25 July 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

கூலி உயர்வு கேட்டு ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் சேலை, கைலி, துண்டு உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி நடைபெறுகிறது. இந்த தொழிலில் விசைத்தறி தொழிலாளர்கள், வைண்டிங் தொழிலாளர்கள், சாயப்பட்டறை தொழிலாளர்கள், நூல் மற்றும் பாவு சுற்றும் தொழிலாளர்கள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு தொடர்பான ஒப்பந்தம் போடப்படும். கடந்த 2014–ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவடைந்த நிலையில், இதுவரை கூலி உயர்வு தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்த பதிலும் இல்லை.

இந்தநிலையில் புதிய கூலி மற்றும் ஊக்க தொகை தொடர்பான ஒப்பந்தம் போட வலியுறுத்தி நேற்று 100–க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செட்டியார்பட்டி கிராமநிர்வாக அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 50 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும், நாள் ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூ.20 வழங்க வேண்டும், விடுமுறை ஊதியம் ரூ.250ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story