மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மானாமதுரையில் கடையடைப்பு
மானாமதுரை வைகை ஆற்று படுகையில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
மானாமதுரை,
மானாமதுரை பகுதியில் வாகுடி, செய்களத்தூர், தெ.புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வைகை ஆற்று படுகையில் மணல் குவாரி அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான பணிகளும் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. மணல் குவாரி அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் அந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும், குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் அ.ம.மு.க., தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மானாமதுரை வணிகர்கள் சங்கம், அரசியல் கட்சியினர் சார்பில் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நேற்று மானாமதுரை நகரில் போராட்டத்திற்கு ஆதரவாக பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மரக்கடை வீதி, பழைய பஸ் நிலையம், தென்கரை, வடகரை என நகரின் முக்கிய இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கடையடைப்பு காரணமாக பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதியடைந்தனர்.
மேலும் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் சங்கம் சார்பில் மானாமதுரை கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக அவர்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர். இதில் வக்கீல்கள் மட்டுமின்றி நீதிபதிகள், கோர்ட்டு ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.