கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்,
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் கடலூர் மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சின்னதுரை தொடக்க உரையாற்றினார்.
முடக்கி வைக்கப்பட்டுள்ள தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை விரிவுபடுத்தி அனைவருக்கும் வழங்க வேண்டும், பலமாதங்களாக தராமல் உள்ள சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும், குடிமனை பட்டா கேட்டு மனு கொடுத்திருக்கும் அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் பிரகாஷ், பொருளாளர் செல்லையா, துணை தலைவர்கள் துரைராஜ், ரமேஷ்பாபு, ஜோதி, துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜெயக்குமார், வாசு மாவட்ட குழு உறுப்பினர்கள் நெடுஞ்சேரலாதன், சுப்பிரமணியன், மணி, தமிழ்அரசன், வெற்றிவீரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக ஊர்வலமாக சென்றனர். நுழைவு வாசல் அருகே வந்தபோது அங்கே பாதுகாப்பாக நின்றபோலீசார் ஒரு கதவை மட்டும் திறந்து விட்டு மற்ற கதவுகளை மூடினார்கள். குறிப்பிட்ட நபர்களை மட்டும் கலெக்டரை சந்திப்பதற்கு அனுமதித்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.