கணவரின் குடிப்பழக்கத்தை கண்டித்து தீக்குளித்த மனைவியை காப்பாற்ற முயன்ற கூலித்தொழிலாளி சாவு
கணவரின் குடிப்பழக்கத்தை கண்டித்து, தீக்குளித்த மனைவியை காப்பாற்ற முயன்ற கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 50). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி ராமாயி (45). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். வெள்ளைச்சாமிக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினமும் குடித்து விட்டு வந்து ராமாயிடம் அவர் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் குடிப்பழக்கத்தை கைவிடுமாறு வெள்ளைச்சாமியிடம் ராமாயி வலியுறுத்தினார். இருப்பினும் அவர் தொடர்ந்து மதுபானம் குடித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த ராமாயி, தனது கணவர் கண் எதிரே தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.
ராமாயியின் உடலில் தீப்பற்றி எரிவதை கண்ட வெள்ளைச்சாமி அதிர்ச்சி அடைந்தார். அவரை காப்பாற்றும் முயற்சியில் வெள்ளைச்சாமி ஈடுபட்டார். இதில், அவருடைய உடலிலும் தீப்பற்றிக் கொண்டது. 2 பேரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
உடல் கருகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளைச்சாமி பரிதாபமாக இறந்தார். ராமாயிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.