அண்ணாசாலையில் விபத்து தண்ணீர் லாரி மோதி தாய், மகன் பலி


அண்ணாசாலையில் விபத்து தண்ணீர் லாரி மோதி தாய், மகன் பலி
x
தினத்தந்தி 25 July 2018 4:29 AM IST (Updated: 25 July 2018 4:29 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அண்ணாசாலையில் மகளின் திருமண பத்திரிகை கொடுக்க சென்றபோது தண்ணீர் லாரி மோதி தாய் மகன் பலியாயினர்.

சென்னை,

சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவரது மனைவி நிர்மலா(வயது 50). இவர்களுக்கு ஹேமாமலினி என்ற மகளும் மகேஷ்(26) என்ற மகனும் உள்ளனர். தட்சணாமூர்த்தி தனது மகள் ஹேமாமலினிக்கு வரும் ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.

இதையடுத்து திருமண வேலைகளில் குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தனர். மகளின் திருமணத்துக்கு பத்திரிகை அடித்து உறவினர்களுக்கு கொடுக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் நேற்று திருவல்லிக்கேணி பகுதியில் பத்திரிகை வைப்பதற்காக நிர்மலா தனது மகன் மகேஷுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது அண்ணாசாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே வந்தபோது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி எதிர்பாராத விதமாக அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிர்மலா மற்றும் மகேஷ் சென்ற மோட்டார் சைக்கிள், தண்ணீர் லாரியின் சக்கரத்தில் சிக்கியது. இதில் தாய், மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விரைந்து வந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் இருவரின் உடலை மீட்டு கஸ்தூரிபா காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தண்ணீர் லாரியை ஓட்டி வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலச்சந்திரன்(38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அண்ணாசாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருமண பத்திரிகையை கொடுக்க சென்ற தாய், மகன் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story