திருபுவனை அருகே பரபரப்பு: 3–வதும் பெண் ஆக பிறந்ததால் புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை, தாய்க்கு வலைவீச்சு


திருபுவனை அருகே பரபரப்பு: 3–வதும் பெண் ஆக பிறந்ததால் புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை, தாய்க்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 July 2018 5:00 AM IST (Updated: 25 July 2018 4:58 AM IST)
t-max-icont-min-icon

திருபுவனை அருகே புதரில் பச்சிளம் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. 3–வதும் பெண் குழந்தையாக பிறந்ததால் வீசி விட்டுச் சென்ற கல் நெஞ்சம் படைத்த தாயை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருபுவனை,

புதுவை மாநிலம் மதகடிப்பட்டு சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையின் பின்புறம் புதர் பகுதியில் நேற்று அதிகாலை நீண்ட நேரமாக குழந்தையின் அழுகுரல் கேட்டது. சத்தம்கேட்டு அங்கு சென்று ஒருவர் பார்த்தபோது பச்சை நிறசேலையில் சுற்றப்பட்ட நிலையில் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை அழுதபடி கிடந்தது தெரியவந்தது.

இதை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். பெண்கள் சிலர் அந்த பச்சிளம் குழந்தையை மீட்டு, பால் கொடுத்தனர். ஆனால் அந்த குழந்தைக்கு உரிமை கொண்டாடி யாரும் வரவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்த திருபுவனை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப்–இன்ஸ்பெக்டர் சீனுவாசன் மற்றும் போலீசார் அங்கு சென்று பச்சிளம் குழந்தையை மீட்டனர். இதுபற்றி குழந்தைகள் நலக்குழுவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் அங்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் அந்த குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

பச்சிளம் குழந்தை அனாதையாக கிடந்தது குறித்து மதகடிப்பட்டு அருகே கலித்தீர்த்தாள்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், விழுப்புரம் அகரம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி வைத்தீஸ்வரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்துக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்தநிலையில் 3–வதும் பெண் குழந்தையாக பிறந்ததால் வைத்தீஸ்வரியும், அவரது குடும்பத்தினரும் விரக்தி அடைந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் கட்டாயமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் பெற்றுக்கொண்டு வைத்தீஸ்வரி வெளியேறினார். இதன்பின் அந்த குழந்தையை மதகடிப்பட்டு பெட்டிக்கடையின் பின்புறம் வீசிவிட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து விழுப்புரம் அகரம் பகுதிக்கு திருபுவனை போலீசார் சென்று விசாரித்த போது ஆஸ்பத்திரியில் தெரிவித்து இருந்த முகவரியில் வைத்தீஸ்வரி என்று யாரும் இல்லை என்பது தெரியவந்தது. பெண் குழந்தை பிறந்தால் வீசி விட்டு சென்று விட வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டு ஆஸ்பத்திரியில் போலியான முகவரியை கொடுத்து இருப்பதும் அதன்படி பெண் குழந்தையை அவர்கள் வீசி விட்டு தப்பிச் சென்று இருக்க வேண்டும் என்றும் தெரிகிறது. குழந்தையை வீசி விட்டுச் சென்ற வைத்தீஸ்வரி குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story