‘ஜூனோ’ வெளியிட்டுள்ள வியாழன் கிரகத்தின் புதிய தகவல்கள்!
நம் சூரிய மண்டலத்தில், சூரியனுக்கு அடுத்த மிகப்பெரிய கிரகம் எதுவென்றால் அது வியாழன் கிரகம்தான்.
சூரிய மண்டலம், சூரியன் மற்றும் பூமி உள்ளிட்ட பல கிரகங்கள் எப்படி தோன்றின என்பது குறித்த அடிப்படை உண்மைகளைக் கண்டறிய வியாழன் கிரகத்தை ஆராய விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இதற்காக, கடந்த 2016-ம் வருடம் அமெரிக்க விண்வெளி நிலையமான ‘நாசா’, ‘ஜூனோ’ எனும் விண்கலத்தை அனுப்பியது.
கடந்த இரண்டு வருடங்களாக, ஜூனோ விண்கலமானது, வியாழன் கிரகத்தின் ஈர்ப்புவிசை மண்டலம் வினோதமானது என்றும், வியாழனின் மேகப்போர்வைக்கு கீழே சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை அதன் வெப்பக்காற்று ஓட்டம் (Jupiter’s jet streams) நீள்கிறது என்றும், மேலும் அந்த வெப்பக்காற்று ஓட்டமானது, ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் ஆன ஒரு திரவக்கலவை என்றும், அந்தக் கலவை ஒரு திடப்பொருள் போல சுற்றுகிறது உள்ளிட்ட வியாழன் கிரகம் குறித்த பல்வேறு உண்மைகளைக் கண்டறிய உதவியுள்ளது.
ஒவ்வொரு 53 நாட்களுக்கு ஒருமுறை வியாழன் கிரகத்தை ஜூனோ செயற்கைக்கோள் சுற்றி வருகிறது. ஒவ்வொரு சுற்றிலும் வியாழன் கிரகத்தின் தோற்றம் மற்றும் பரிணாமம் தொடர்பான பல உண்மைகளை கண்டறிய உதவும் தகவல்களை ஜூனோ விண்கலம் சேகரித்து அனுப்புகிறது.
அந்த வரிசையில், ஜூனோ விண்கலம் அனுப்பியுள்ள சமீபத்திய தகவல்களில், ஐஓ மற்றும் கேணிமீட் (Io and Ganymede) எனும் வியாழன் கிரகத்தின் இரண்டு நிலவுகள், வியாழனின் வளிமண்டலத்தை எப்படி பாதிக்கின்றன என்று தெரியவந்துள்ளது.
பூமியில் உள்ள வட துருவ மற்றும் தென் துருவ ஒளிகள் உருவாவது போலவே, வியாழன் கிரகத்தின் மேல் வளி மண்டலத்தில், அதிக ஆற்றல் கொண்ட எலெக்ட்ரான்கள் அங்குள்ள காந்த மண்டலத்துடன் மோதும்போது வியாழன் கிரகத்தின் துருவ ஒளி அல்லது துருவ மின்னொளி (aurora) உற்பத்தியாகிறது.
அல்ட்ரா வயலெட் ஸ்பெக்ட்ரோகிராப் (Ultraviolet Spectrograph, UVS) மற்றும் ஜோவியன் எனர்ஜெடிக் பார்டிகில் டிடெக்டர் (Jovian Energetic Particle Detector Instrument, JEDI) ஆகிய கருவிகள் மூலமாக ஜூனோ சேகரித்த தகவல்களில் இருந்து வியாழன் கிரகத்தின் காந்த மண்டலமானது பூமியில் உள்ளதை விட மிக மிக சக்தி வாய்ந்ததாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முக்கியமாக, ஐஓ மற்றும் கேணிமீட் ஆகிய வியாழனின் இரு நிலவுகளும் வியாழனை எப்போதெல்லாம் நெருங்கி வந்து கடந்து செல்கின்றனவோ, அப்போதெல்லாம் பூமியில் உள்ள துருவ ஒளியை விட சுமார் 30 மடங்கு அதிகமாக இருக்கக்கூடிய (சுமார் 4 லட்சம் எலெக்ட்ரான் வோல்ட் வரை), வியாழனின் வட மற்றும் தென் துருவ ஒளி புயல்களில் முட்டை வடிவ சலனங்கள் தோன்றுகின்றன என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வட அல்லது தென்துருவ மின்னொளி முட்டை வடிவம் (auroral oval) என்று அழைக்கப்படும் மின்னொளி நிகழ்வுகள் வியாழனின் நிலவுகளுடன் தொடர்புடையதாய் இருக்கின்றன என்பதும், இவை, (von Krmn vortex street என்று அழைக்கப்படும்) மீண்டும் மீண்டும் தோன்றும் ஒரு சுழலை ஒத்தவையாக இருக்கின்றன என்பதும் ஜூனோ விண்கலத்தின் அகச்சிவப்பு பதிவுகள் மூலமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஐஓ நிலவு வியாழனை நெருங்கும்போதெல்லாம் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீளம் கொண்ட மின்னொளி சுழல்கள் வியாழனில் தோன்றுவதும், ஆனால் ஐஓ வியாழனை விட்டு தூரம் செல்ல செல்ல அந்த சுழல்கள் மறைந்துபோவதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், வியாழனின் மின்னொளியில் இரண்டு புள்ளிகள் கேணிமீட் நிலவு காரணமாக தோன்றுவதும், அதற்கு கேணிமீட் மற்றும் வியாழன் ஆகிய இரண்டின் காந்த மண்டலங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதே காரணம் என்றும் இந்த ஆய்வில் கூறப்படுகிறது.
முக்கியமாக, வியாழன் கிரகத்தின் காந்தப் புயல்களை ஆய்வு செய்வதே ஜூனோ திட்டத்தின் முதன்மையான இலக்குகளில் ஒன்று என்றும், இந்த ஆய்வுகள் மூலமாக வியாழன் கிரகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் காலப்போக்கில் அது எப்படி பரிணாமம் அடைந்தது உள்ளிட்ட பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஜூனோ விண்கலம் வருகிற 2021-ம் வருடம் வரை ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றும், வியாழன் தொடர்பான இதுபோன்ற மேலதிக ஆய்வுகள் மூலமாக நமது சூரிய மண்டலத்தின் தோற்றம் குறித்த உண்மைகளைக் கண்டறிய முடியும் என்கிறார்கள் விண்வெளி ஆய்வாளர்கள்.
Related Tags :
Next Story