அரசு வழங்கிய நிலத்தில் வீடு கட்ட எதிர்ப்பு: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை

அரசு வழங்கிய நிலத்தில் வீடு கட்ட எதிர்ப்பு: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 26 July 2018 2:45 AM IST (Updated: 25 July 2018 8:02 PM IST)
t-max-icont-min-icon

அரசு வழங்கிய நிலத்தில் வீடு கட்ட எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.

நெல்லை, 

அரசு வழங்கிய நிலத்தில் வீடு கட்ட எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.

முற்றுகை போராட்டம்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா வன்னிக்கோனேந்தல் மேசியாபுரத்தை சேர்ந்த கிராம மக்கள் தமிழ்புலிகள் அமைப்பினர் நிர்வாகி தமிழ்செல்வன் தலைமையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–

வீடு கட்ட எதிர்ப்பு

கடந்த 1971–ம் ஆண்டு அரசு சார்பில் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அங்கு வீடு கட்ட மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

சமீபத்தில் அந்த பகுதியில் மண்ணை கொட்டி சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டோம். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, எங்கள் தரப்பை சேர்ந்தவர்களை தாக்கினார்கள். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்தவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதைக் கண்டித்து அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டோம். அதன்பிறகும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசு கொடுத்த நிலத்தில் வீடு கட்டுவதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Next Story