காட்டுப் பூனையால் பரபரப்பு; அச்சத்தில் வகுப்பறைகளை பூட்டி பாடம் நடத்திய பேராசிரியர்கள்


காட்டுப் பூனையால் பரபரப்பு; அச்சத்தில் வகுப்பறைகளை பூட்டி பாடம் நடத்திய பேராசிரியர்கள்
x
தினத்தந்தி 26 July 2018 4:15 AM IST (Updated: 25 July 2018 8:28 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் கல்லூரிக்குள் புகுந்த காட்டுப் பூனையால் பரபரப்பு ஏற்பட்டது. அது சிறுத்தையாக இருக்குமோ? என்ற அச்சத்தில் கல்லூரி பேராசிரியர்கள் வகுப்பறைகளை பூட்டிக்கொண்டு மாணவ– மாணவிகளுக்கு பாடம் நடத்தினார்கள்.

நாகர்கோவிலில்,

நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து பீச்ரோடு செல்லும் சாலையில் இந்துக்கல்லூரி உள்ளது. கல்லூரி வளாகத்துக்கு உள்ளே ஒரு பகுதி புல் பூண்டுகளும், மரங்களும் அடர்ந்து வளர்ந்து காடு போன்று காட்சி தருகின்றன. எனவே அவற்றை அகற்றி சுத்தம் செய்ய கல்லூரி நிர்வாகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று காலையில் மண்டிக்கிடக்கும் புதர்களை வெட்டி அகற்றும் பணி தொடங்கியது. இந்த வேலையில் சுமார் 10 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இந்தநிலையில் சூரங்குடி பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலாளி தான் புல் வெட்டிக்கொண்டிருந்த பகுதி வழியாக சிறுத்தை குட்டி போன்ற உருவத்தில் ஒரு மர்ம விலங்கு கடந்து சென்றதாக கூறப்படுகிறது.


அந்த விலங்கின் வால், உடல் தோற்றம் ஆகியவற்றைக் கொண்டு அது சிறுத்தை குட்டிதான் என்று முடிவு செய்த அந்த தொழிலாளி பதற்றம் அடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் இதுகுறித்து உடன் வேலை செய்த மற்ற தொழிலாளிகளிடமும், கல்லூரி நிர்வாகிகளிடமும் தெரிவித்தார். இதனால் கல்லூரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே கல்லூரி முதல்வர் சிதம்பரதாணு, வகுப்பறைகளில் உள்ள மாணவ– மாணவிகளை வெளியே விடாமல், வகுப்பறைகளை உள்புறமாக பூட்டிக்கொண்டு பாடம் நடத்தும்படியும், தேர்வு நடைபெற்ற வகுப்பறைகளின் கதவுகளையும் உள்புறமாக பூட்டிக்கொள்ளுமாறும் பேராசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி கல்லூரியின் அனைத்து வகுப்பறைகளும் உள்புறமாக பூட்டப்பட்டது. சிறுத்தை புகுந்த தகவலை அறிந்த மாணவ– மாணவிகளும், கல்லூரி பேராசிரிய– பேராசிரியைகளும் வகுப்பறைகளுக்குள் கலக்கத்துடனே அமர்ந்திருந்தனர்.


பின்னர் இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகிகளுக்கும், வனத்துறை மற்றும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கல்லூரி நிர்வாகக்குழு துணைச்செயலாளர் நாகராஜன், கோட்டார் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதன்பிறகு மாவட்ட வனத்துறை அதிகாரி ஆனந்த் உத்தரவின்பேரில் உதவி வன பாதுகாவலர் ஷாநவாஸ்கான், நாகர்கோவில் வனச்சரகர் திலீபன், பூதப்பாண்டி வனச்சரகர் வெங்கடாசலபூபதி மற்றும் ஊழியர்கள் வந்தனர்.

அவர்கள் சிறுத்தை நடமாடியதாக கூறப்பட்ட பகுதியில் ஆய்வு செய்தனர். அந்த பகுதியில் இருந்த கால்தடங்களையும் பார்வையிட்டனர். சிறுத்தைக்குட்டியின் கால்தடம் போன்று இரண்டு, மூன்று இடங்களில் கால்தடம் பதிவாகி இருந்தது. அதனை பார்வையிட்டு, அந்த கால்தடங்களை சேகரித்தனர். அந்த கால்தடங்களை பார்வையிட்டு கூறிய வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:–


இது சிறுத்தையின் கால்தடம் அல்ல. சிறுத்தை மற்றும் புலிகளின் கால்தடத்தில் நகம் பதிவாகாது. ஆனால் இங்கு பதிவாகியுள்ள கால்தடத்தில் நகமும் பதிவாகியிருக்கிறது. எனவே தொழிலாளி பார்த்ததாக கூறிய விலங்கு 90 சதவீதம் காட்டுப்பூனையாக இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் சிறுத்தைக்குட்டி உருவில் இருக்கும். அது 10 கிலோ எடை வரை இருக்க வாய்ப்புள்ளது என்றனர். இருப்பினும் நாங்கள் சேகரித்துள்ள விலங்கின் கால்தடத்தை நெல்லை மாவட்டத்தில் உள்ள முண்டன்துறை புலிகள் சரணாலய பரிசோதனைக்கூடத்துக்கு அனுப்பி வைக்க இருக்கிறோம். பரிசோதனை முடிவில் கால்தடம் பதிவாகியுள்ள விலங்கு எது? என்பது தெரியும் என்றனர்.

பின்னர் புதர்மண்டிக்கிடந்த பகுதிகளுக்குள்ளும் வனத்துறை அதிகாரிகள் சென்று பார்த்தனர். ஆனால் தொழிலாளி சிறுத்தை என கூறிய விலங்கு எதுவும் தென்படவில்லை. இருப்பினும் புதர்களாக உள்ள பகுதிகளுக்கு மாணவ– மாணவிகள் செல்லாதவாறு பார்த்துக்கொள்ளும்படி கல்லூரி நிர்வாகத்தினரிடம் வனத்துறையினர் கூறிச்சென்றனர்.


வழக்கமாக கல்லூரி காலை 8.20 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும். நேற்று காலை 10 மணி முதல் 11.30 மணி ஒரு பிரிவு மாணவ– மாணவிகளுக்கும், மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை மற்றொரு பிரிவு மாணவ– மாணவிகளுக்கும் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று சிறுத்தை நடமாடியதாக பரவிய தகவலால் ஒரு பிரிவு மாணவ– மாணவிகளுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. மற்றொரு பிரிவு மாணவ– மாணவிகளுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டதோடு, மதியம் 12.15 மணிக்கு மாணவ– மாணவிகள் அனைவரையும் வீட்டுக்குச் செல்லுமாறு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக மாவட்ட வனத்துறை அதிகாரி ஆனந்திடம் கேட்டபோது, “நாகர்கோவில் இந்துக்கல்லூரியில் சிறுத்தை எதுவும் இல்லை. காடுகள் எதுவும் அருகில் இல்லாத நிலையில் நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த கல்லூரிக்குள் சிறுத்தை இருக்க வாய்ப்பே இல்லை. அங்கு பதிவாகியுள்ள கால்தடத்தை பார்க்கும்போது அது காட்டுப்பூனை என்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும் கால்தடத்தை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்ப இருக்கிறோம்“ என்றார்.

Next Story