ஏர்வாடி அருகே கரையில் ஏற்பட்ட விரிசலால் பெரியகுளம் உடையும் அபாயம் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை


ஏர்வாடி அருகே கரையில் ஏற்பட்ட விரிசலால் பெரியகுளம் உடையும் அபாயம் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 26 July 2018 2:30 AM IST (Updated: 25 July 2018 8:44 PM IST)
t-max-icont-min-icon

ஏர்வாடி அருகே கரையில் ஏற்பட்ட விரிசலால் பெரியகுளம் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கரையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏர்வாடி, 

ஏர்வாடி அருகே கரையில் ஏற்பட்ட விரிசலால் பெரியகுளம் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கரையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளம் நிரம்பியது 

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடியில் தென்காசி– நாகர்கோவில் பிரதான சாலையில் பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குளத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, குளம் நிரம்பியது.

இந்தநிலையில் குளத்தின் கரையில் கடந்த மாதம் (ஜூன்) நடுமடை அருகே விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசலால் குளம் உடையும் அபாயம் ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அப்பகுதியில் திடீர் என விரிசல் ஏற்பட்டது. அப்போது இந்த விரிசல் மணல் மூடைகள் அடுக்கப்பட்டு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. அதன் பின்னர் சிறிது நாட்களில் குளத்தின் தடுப்பு சுவரும் இடிந்து விழுந்தது. மடை பழுதையும், இடிந்து விழுந்த தடுப்பு சுவரையும் சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் 8 மாதங்கள் ஆகியும் அங்கு சீரமைப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

கரையில் விரிசல் 

இந்தநிலையில் நேற்றும் அதே பகுதியில் மீண்டும் விரிசல் ஏற்பட்டு, தண்ணீர் அதிகளவில் வெளியேறி வருகிறது. அதனால் கரையும் பாதிப்படைந்து வருகிறது. குளக்கரையின் வழியாக தினமும் ஏராளமான பஸ்கள் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன. குளம் உடைந்தால் அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் மற்றும் கிராமங்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே குளக்கரையில் ஏற்பட்டுள்ள விரிசலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story