தண்ணீர் அதிகமாக வந்ததால் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட மாடுகள் பொதுமக்கள் மீட்டனர்


தண்ணீர் அதிகமாக வந்ததால் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட மாடுகள் பொதுமக்கள் மீட்டனர்
x
தினத்தந்தி 26 July 2018 4:00 AM IST (Updated: 25 July 2018 10:29 PM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் அதிகமாக வந்ததால் மாடுகள் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள், தீயணைப்புத்துறையினர் உயிருடன் மாடுகளை மீட்டனர்.

தஞ்சாவூர்,

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளிலும் அதிகஅளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் கொள்ளிடத்தை தவிர மற்ற ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தஞ்சை கல்லணைக்கால்வாய் எனப்படும் புதுஆற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தஞ்சை ரெட்டிப்பாளையம் பகுதியில் ஆற்றில் தண்ணீர் குடிக்க சென்ற 2 எருமைமாடுகள் எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டது.


இதனால் மாடுகள் கரையேற முடியாமல் தத்தளித்தபடியே ஆற்றில் சென்றது. தஞ்சை பெரியகோவில் அருகே மாடுகள் சென்றதை பார்த்த பொதுமக்களில் சிலர் ஆற்றில் குதித்து மாடுகளை கரைக்கு கொண்டுவர முயன்றனர்.

இது குறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து கயிறு உதவியுடன் மாடுகளை மீட்க முயன்றனர். ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் உடனடியாக மீட்கமுடியவில்லை. ஆற்றில் குதித்தவர்கள் மாட்டின் கயிற்றை பிடித்துக்கொண்டே நீந்தியபடி வந்தனர். நீண்டதூரம் வந்ததால் மாடுகளால் நீந்த முடியாத நிலை ஏற்பட்டது.


தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள பாலம் அருகே வந்தவுடன் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கயிறு மூலம் மாடுகள் உயிருடன் மீட்கப்பட்டன. தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தால் ஆற்றில் குதித்து மாடுகளை மீட்டவர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

Next Story