வேகமாக நிரம்பி வரும் திருமூர்த்தி அணை பாசனத்திற்கு இன்று திறப்பு
காண்டூர் கால்வாய் மூலமாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் திருமூர்த்தி அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதையடுத்து இன்று பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
தளி,
மேற்கு தொடர்ச்சி மலையை நீராதாரமாக கொண்டு சோலையாறு, ஆழியாறு, பரம்பிக்குளம், அப்பர்நீராறு, லோயர்நீராறு, தூனக்கடவு, பெருவாரிப்பள்ளம், திருமூர்த்தி உள்ளிட்ட அணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைகளுக்கு மழைக்காலங்களில் மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக நீர்வரத்து ஏற்படுகின்றது.
அதை அடிப்படையாக கொண்டு பி.ஏ.பி. பாசனத்திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்று வருகின்றது. அது மட்டுமின்றி குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் பி.ஏ.பி. தொகுப்பு அணைகளை நீராதாரமாக கொண்டு விவசாயிகள் கரும்பு, வாழை, நெல், தென்னை மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பி.ஏ.பி. தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. தொடர்ச்சியான நீர்வரத்தால் பி.ஏ.பி. தொகுப்பு அணைகள் நிரம்பி வழிந்தது.
அதைத்தொடர்ந்து சோலையாறு மற்றும் பரம்பிக்குளம் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. ஆனால் திருமூர்த்தி அணையின் நீராதாரங்களில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. அதைத் தொடர்ந்து பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து அணையில் இருந்து முதலாம் மண்டல பாசனத்திற்கு இறுதிச் சுற்று தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் படி இன்று (வியாழக்கிழமை) பி.ஏ.பி. பிரதான கால்வாய் மூலமாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
திருமூர்த்தி அணையின் மொத்த உயரம் 60அடி ஆகும். நேற்று காலை 8மணி நிலவரப்படி அணையில் 54.95 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு காண்டூர் கால்வாய் மூலமாக 950 கன அடியும் பாலாற்றின் மூலமாக 10 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 30 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது.
Related Tags :
Next Story