சமூக வலைத்தளங்களை பார்த்து வீட்டில் வைத்து சுகப்பிரசவத்திற்கு முயற்சி: ஆசிரியை சாவு


சமூக வலைத்தளங்களை பார்த்து வீட்டில் வைத்து சுகப்பிரசவத்திற்கு முயற்சி: ஆசிரியை சாவு
x
தினத்தந்தி 26 July 2018 3:15 AM IST (Updated: 26 July 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைத்தளங்களை பார்த்து வீட்டில் வைத்து சுகப்பிரசவத்திற்கு முயன்ற ஆசிரியை இறந்தார். குழந்தைக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நகர்நல அதிகாரி போலீசில் புகார் செய்தார்.

நல்லூர், 


பெண்களுக்கு பிரசவம் என்பது மறுபிறப்பு போன்றதுஆகும். கடந்த காலங்களில் தாய் வீடுகளில் பிரசவம் நடக்கும். தற்போது மருத்துவம் வளர்ந்து விட்ட நிலையில் வீடுகளில் பிரசவம் நடப்பது அரிதாகிபோனது. கருவுற்ற பெண்கள் ஒவ்வொரு நாளும் என்ன உணவு சாப்பிட வேண்டும். எந்த மருந்து உட்கொள்ள வேண்டும் என்று டாக்டர்களிடம் ஆலோசனை கேட்டு அதன்படி நடந்துவருகிறார்கள். வீட்டிற்கு வந்ததும் சந்தேகம் வந்தால் கூட டாக்டரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்தேகத்தை தீர்த்துக்கொள்கிறார்கள். இதனால் இப்போது வீடுகளில் பிரசவம் என்பது சுத்தமாக நின்றுபோனது.

அனைத்து பிரசவங்களும் ஆஸ்பத்திரிகளில் நடக்கிறது. கிராமங்களில் உள்ள பெண்கள் கூட மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்று கருதும் நிலையில், தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் சமூக வலைத்தளத்தில் உள்ள தகவல்களை கொண்டு சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க முயன்று குழந்தை பெற்ற பின் அவர் இறந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

திருப்பூர் காங்கேயம் ரோடு புதுப்பாளையம் அருகே உள்ள ரத்தினகிரீஸ்வரர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 34). பனியன் வர்த்தக நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கிருத்திகா (28). விஜயாபுரம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு டிமானி (3) என்ற பெண் குழந்தை உள்ளது. 

இந்த நிலையில் கிருத்திகா, 2-வது முறையாக கர்ப்பமானார். அதை தொடர்ந்து கிருத்திகா, சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க விரும்பினார். இதற்காக கிருத்திகா ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டர்களிடம் ஆலோசனை பெறாமல் இருந்து வந்துள்ளார். மேலும் சுகப் பிரசவத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளத்தில் உள்ள தகவல்படி ஒவ்வொரு மாதமும் உணவு உட்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கிருத்திகாவுக்கு கடந்த 22-ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கார்த்திகேயன் தனது நண்பர் பிரவீன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். உடனே பிரவீன் தனது மனைவியுடன், கார்த்திகேயன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் கிருத்திகா வலியால் துடித்துக்கொண்டிருந்தார். இதையடுத்து சமூக வலைத்தளத்தில் சுகப்பிரசவம் பார்ப்பது? எப்படி என்று செல்போனில் தெரிந்து கொண்டு அதன்படி கிருத்திகாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

இதையடுத்து சிறிது நேரத்தில் கிருத்திகாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் கிருத்திகாவின் உடலில் இருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறிதால் அவர் மயக்கம் அடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் மற்றும் அவருடைய நண்பர் ஆகியோர் கிருத்திகாவையும், குழந்தையையும் ஆம்புலன்சில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கிருத்திகாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் கார்த்திகேயன் மயக்கம் அடைந்தார்.

ஆனால் கிருத்திகா பெற்றெடுத்த பெண் குழந்தை நல்ல ஆரோக்கியமாக உள்ளது. இந்த குழந்தை ஆஸ்பத்திரியில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இது பற்றிய தகவல் அறிந்ததும் மாநகராட்சி நகர்நல அதிகாரி பூபதி திருப்பூர் ஊரக போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் கிருத்திகாவிற்கு வீட்டில் பிரசவம் பார்த்தது எதற்காக? என்று விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் போலீசார், கிருத்திகாவின் கணவர் கார்த்திகேயன் மற்றும் அவருடைய நண்பர் பிரவீன் ஆகியோரிடம் விசாரணை நடத்த முயன்று வருகிறார்கள். ஆனால் அவர்கள் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் பிரசவம் இலவசமாக பார்க்கும்போது அங்குபோகாமல் சமூக வலைத்தளம் மூலம் பிரசவம் பார்க்க காரணம் என்ன? என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் சமூக வலைத்தளம் மூலம் சுகபிரசவத்திற்கு முயன்று உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story