லாரிகள் வேலை நிறுத்தம்: ரூ.10 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் டன் அரிசி தேக்கம்


லாரிகள் வேலை நிறுத்தம்: ரூ.10 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் டன் அரிசி தேக்கம்
x
தினத்தந்தி 26 July 2018 3:15 AM IST (Updated: 26 July 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக தினமும் ரூ.10 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் டன் அரிசி தேக்கம் அடைந்துள்ளது. அரிசி மூடைகளை இருப்பு வைக்க இடமில்லாமல் உரிமையாளர்கள் திணறுகிறார்கள்.

காங்கேயம், 


பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும், 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் நேற்று 6-வது நாளாக தொடர்ந்தது. இதனால் வர்த்தகம் முடங்கி விட்டது. வெளியூர்களில் இருந்து எந்த பொருட்களையும் கொண்டு வரமுடியவில்லை. உள்ளூரில் இருந்து எந்த பொருளும் வெளியூர் கொண்டு செல்லப்படவில்லை.

குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் எண்ணெய், அரிசி, பின்னலாடை, நெய் போன்றவை தேங்கிக்கிடக்கிறது. இதனால் மேற்கண்ட தொழில்களை நம்பி இருந்த தொழிலாளர்களும் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். விவசாய விளை பொருட்களையும் வியாபாரிகள் வாங்கிச்செல்ல முன்வருவதுஇல்லை. சின்ன வெங்காயம் மற்றும் பெரியவெங்காயம் ஆகியவை அறுவடை செய்யப்பட்ட வயல்களிலும், தோட்டங்களிலும் அப்படியே போடப்பட்டுள்ளது. வயல் மற்றும் தோட்டங்களில் அறுவடை செய்து வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை விற்பனை செய்ய முடியாமலும், இருப்பு வைக்க முடியாமலும் விவசாயிகள் தவிக்கிறார்கள்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தேங்காய் எண்ணெய்க்கு அடுத்த படியாக அரிசி அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து நெல் கொண்டு வரப்படுகிறது. பின்னர் அவை அரிசியாக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக, வெளிமாநிலங்களில் இருந்து நெல் கொண்டு வரப்படவில்லை. நெல் ஏற்றப்பட்ட லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. அதுபோல் அரிசி ஆலையில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட அரிசி மூடைகள் ஆலைகளில் ஆங்காங்கே இருப்பு வைக்கப்பட்டுள்ளது. குடோன்கள் அரிசி மூடைகளால் நிரம்பி விட்டதால் அவற்றை வைப்பதற்கு இடமில்லாமல் உரிமையாளர்கள் திணறி வருகிறார்கள்.

இது குறித்து திருப்பூர் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் எம்.ராமசாமி கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் 225 அரிசி ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த 6 நாட்களாக அரிசி ஆலைகளில் இருந்து அரிசி மூடைகளை வெளியில் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் அரிசி மூடைகளை ஆலைகளில் இருப்பு வைத்துள்ளோம். தற்போது இருப்பு வைக்க இடமில்லை. வேலை நிறுத்தம் இனியும் தொடர்ந்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். எனவே லாரி உரிமையாளர் சங்கத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பூரில் இருந்து சரக்குகள் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு அனுப்ப முடியாமல் தொழில்துறையினர் நிறுவனங்களில் தேக்கிவைத்துக்கொண்டே வருகின்றனர். தற்போது குளிர்காலத்திற்கான ஆடை தயாரிப்பு திருப்பூரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்கான ஆடைகள் தயாரிக்கப்பட்டும் அதனை அனுப்ப முடியாமல் தொழில்துறையினர் அவதியடைந்து வருகிறார்கள். நாளுக்கு நாள் ஆடைகள் தயாரிப்பும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சரக்குகள் வெளியே செல்லாததால் தொடர்ந்து தேக்கமடைந்து வருகிறது. கடந்த 6 நாட்களாக போராட்டம் நடந்துள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் ரூ.600 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதித்துள்ளது என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரமும் பாதித்துள்ளது. இந்த போராட்டம் தொடர்ந்து நீடித்து வந்தால் திருப்பூர் தொழில்துறையினரின் கைவசம் இருக்கும் வர்த்தகர்கள், கைமாறி சென்று விடுவார்கள். இது திருப்பூர் தொழில்துறையினருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என தொழில்துறையினர் தெரிவித்தனர். 

Next Story