குடிமராமத்து பணி மேற்கொள்ளப்படும் கண்மாய்களில் கருவேல மரங்களை வேரோடு அகற்ற வேண்டும்: அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு
குடிமராமத்து பணி மேற்கொள்ளப்படும் கண்மாய்களில் கருவேல மரங்களை வேரோடு அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் லதா உத்தரவிட்டார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மணிமுத்தாறு வடிநில கோட்டத்தின் மூலம் குடிமராமத்து பணிகள் மற்றும் தடுப்பணை கட்டும் பணிகளை கலெக்டர் லதா நேற்று ஆய்வு மேற்கொண்டார். தானிப்பட்டி ஊராட்சியில் உள்ள வில்லூர் பெரியகண்மாய், திருக்கோஷ்டியூர் சொக்கநாராயணபேரி கண்மாய், ஆலம்பட்டி நாராயணமங்கலம் கண்மாய் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்துப் பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பாசன விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளிடம் அவர் கூறியதாவது:–
மாவட்டத்தில் மணிமுத்தாறு வடிநில கோட்டத்தின்கீழ் 11 ஊராட்சிகளில் 11 கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு குடிமராமத்து பணி நடைபெற்று வருகிறது. மழைக்காலத்தை கருத்தில் கொண்டு இப்பணி விரைவாக நடத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கண்மாயின் உட்பகுதியில் மண் எடுத்து கரையை பலப்படுத்தப்படுகின்றன. மேலும் மடைகள் பழுதடைந்திருந்தால் உடனடியாக சீரமைக்கப்படுகிறது. அதேபோல் கழுங்குப் பகுதியும் சீரமைக்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி கண்மாயின் உட்புறப்பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் தேவையற்ற செடி, கொடிகள் அனைத்தையும் வேரோடு அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் காரையூர் ஊராட்சியில் மணக்குடி அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.2½ கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டு வரும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டதுடன், மழைக்காலம் தொடங்குவதற்குள் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மணிமுத்தாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் ஆனந்த் பரிவாளன், திருப்பத்தூர் தாசில்தார் தங்கமணி, பாசன விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.