லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு செல்ல தரைப்பாலம் விரைவில் கட்டப்படும்


லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு செல்ல தரைப்பாலம் விரைவில் கட்டப்படும்
x
தினத்தந்தி 26 July 2018 3:15 AM IST (Updated: 26 July 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

கணியம்பாடி அருகே உள்ள சிங்கிரிகோவில் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் ஆற்றை கடந்து செல்ல வசதியாக விரைவில் தரைப்பாலம் கட்டப்படும் என்று கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

அடுக்கம்பாறை, 

கணியம்பாடி அருகே உள்ள சிங்கிரிகோவில் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் ஆற்றை கடந்து செல்ல வசதியாக விரைவில் தரைப்பாலம் கட்டப்படும் என்று கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

கணியம்பாடி அருகே உள்ள சிங்கிரிகோவில் கிராமத்தில் சிறப்பு மனு நீதிநாள் முகாம் நேற்று நடந்தது. தாசில்தார் பாலாஜி தலைமை தாங்கினார். ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் மெகராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் கஜேந்திரன், சமூக பாதுகாப்புத் துறை துணை கலெக்டர் பூங்கொடி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணியம்பாடி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராகவன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் சி.அ.ராமன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது-

வேலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 70 ஹெக்டர் பரப்பளவில் நுண்நீர் பாசன திட்டம் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது நுண்நீர் பாசன திட்டத்தில் பயனடைய விரும்புவோருக்கு வேளாண் கருவிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

சிங்கிரிகோவில் கிராமத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றை கடந்து செல்ல பாலம் அமைக்க வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அவர்களது கோரிக்கையை ஏற்று ஆற்றை கடந்து செல்ல விரைவில் தரைப்பாலம் கட்டப்படும்.

2019-ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்ப்பதோடு, இந்த திட்டம் செயல்படுத்த ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


இதனை தொடர்ந்து ரூ.4 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில், 458 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமிற்கு முன்னதாக கத்தாழம்பட்டு கிராமத்தில் கட்டப்பட்டு வரும் கிராம சேவை மைய கட்டிடம் மற்றும் லட்சுமிபுரம் கிராமத்தில் தூர்வாரப்பட்டுள்ள குளம் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.

முகாமில் கால்நடைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) சாந்தகுமாரி, வேளாண்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) தீக்‌ஷித், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் பொண்ணு, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பிரேம்குமார், சுகாதாரத்துறை துணை இயக்குனர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story