குமரி மாவட்டத்தில் தொடரும் சீற்றம்: கடல்நீர் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு


குமரி மாவட்டத்தில் தொடரும் சீற்றம்: கடல்நீர் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 July 2018 4:45 AM IST (Updated: 26 July 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டம் அழிக்காலில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடல் சீற்றத்தை தடுக்க தூண்டில் வளைவு அமைக்கக்கோரி பஸ்களை மீனவர்கள் சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்,

தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை பொழியும் பகுதி குமரி மாவட்டம் ஆகும். இங்கு ஆண்டு முழுவதும் சீரான சீதோஷ்ண நிலை நிலவுவதுடன், சுற்றுலா தலங்களும் அதிகம் உள்ளதால் வெளி மாநிலத்தவரும், வெளிநாட்டவரும் குமரி மாவட்டத்துக்கு ஆர்வத்துடன் சுற்றுலா வருவது வழக்கம்.

பொதுவாக, குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் பருவ மழை பெய்யும். அந்த சமயத்தில் பலத்த காற்று வீசுவதுடன் கடலும் சீற்றமாக இருக்கும். அந்த வகையில் கடல் தற்போது தொடர்ந்து சீற்றமாக உள்ளது. கடலோர பகுதியில் நேற்றும் பலத்த காற்று வீசியது. ஆனால் அலைகள் வழக்கத்தை விட அதிகமாக, ஆக்ரோஷத்துடன் கடற்கரையை நோக்கி சீறிபாய்ந்தபடி இருந்தன.

இந்தநிலையில் நேற்று மதியம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அழிக்கால் பகுதியில் திடீரென கடல் நீர் ஊருக்குள் புகுந்து வீட்டை சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்து விட்டது. இதனால் மீனவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். கடல் அலையின் சீற்றம் தொடர்ந்து நீடித்ததால் கடற்கரையில் வசிக்கும் மீனவர்கள் அச்சத்துடனேயே இருந்தனர். மேலும், கடல் நீர் மீண்டும் வீட்டிற்குள் புகுந்து விடாமல் இருப்பதற்காக சிலர் வீடுகளின் முன்பாக மண்மூடைகளை அடுக்கி வைத்திருந்தனர்.

இதற்கிடையே கடல் நீர் ஊருக்குள் புகுந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. அழிக்கால் பகுதிக்கு விரைந்து சென்றார். அங்கு மீனவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, பருவமழை காலங்களில் எங்களுடைய பகுதியில் கடல் நீர் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடுகிறது. இதனை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதை தொடர்ந்து சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை நேரில் சந்தித்து அழிக்கால் பகுதியில் ஊருக்குள் கடல் நீர் அடிக்கடி புகுந்து விடுவதாகவும், இதனை தடுக்க அங்கு தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே, இதுதொடர்பாக அழிக்கால் பகுதியில் மாலையில் அதிகாரிகளை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இந்த விவரத்தை, சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., மீனவர்களிடமும் தெரிவித்துள்ளார்.

ஆனால் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியபடி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. அதிகாரிகளும் அழிக்கால் பகுதிக்கு செல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மீனவர்கள், சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் ஊர் தலைவர் ஜான்சன், பங்குதந்தை சோரிப் ஆகியோருடன் அழிக்கால் தூய மரிய அன்னை ஆலயம் முன்பு திரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அந்த சாலை வழியாக வந்த 2 அரசு பஸ்களையும் சிறைபிடித்தனர்.

அரசு பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீஸ் துணை சூப்பிரண்டு வினோஜ், வெள்ளிச்சந்தை இன்ஸ்பெக்டர் மதன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தூண்டில் வளைவு அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தால் தான் மறியலை கைவிடுவோம் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் பாஞ்சாலி, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கலெக்டர் கூறியதின் பேரில் இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்துகிறேன். உங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக நாளை (அதாவது இன்று) மாலை கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் என்னிடம் தெரிவித்ததாக கூறினார். இதில் சமாதானம் அடைந்த போராட்டக்காரர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட பஸ்களும் விடுவிக்கப்பட்டன. இந்த திடீர் மறியலால் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அழிக்காலை போல் குளச்சல், கொட்டில்பாடு, முட்டம் பகுதிகளில் கடல் அலை மிகவும் ஆக்ரோஷத்துடன் இருந்ததை காண முடிந்தது. குளச்சல் கடல் பகுதியில், பலத்த காற்றால் உருவான ராட்சத அலைகள் கடலுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் பாலத்தின் மீது மோதி பல அடி உயரத்துக்கு எழும்பி சிதறியது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளை வெளியே செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

Next Story