திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் நாளை இரவு முழு சந்திரகிரகணம் நிகழ்வதை பார்க்க ஏற்பாடு


திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் நாளை இரவு முழு சந்திரகிரகணம் நிகழ்வதை பார்க்க ஏற்பாடு
x
தினத்தந்தி 26 July 2018 4:15 AM IST (Updated: 26 July 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

நாளை இரவு முழு சந்திர கிரகணம் நிகழ்வதை பார்க்க திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

திருச்சி,

அரிய வான் நிகழ்வான முழு சந்திர கிரகணம் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11.54 மணிக்கு ஆரம்பமாகிறது. முழு கிரகணம் மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு தொடங்கும். அதிக பட்ச கிரகணம் 1.52 மணிக்கு நிகழும். முழு கிரகணம் 2.43 மணிக்கு முடியும். பகுதி சந்திர கிரகணம் அதிகாலை 3.49 மணிக்கு முடியும்.

புவியின் கூம்பு வடிவ முழு நிழல் பகுதியின் உட்புறம் சந்திரன் முழுமையாக நுழைந்து கடந்து சென்றால் அது முழு சந்திர கிரகணம் எனப்படும். அப்போது சந்திரனின் ஒளி வெகுவாக குறையும். புவியின் நிழல் பகுதியில் சந்திரன் இருந்தாலும் புவியின் வளி மண்டலத்தில் பட்டு சிதறடிக்கப்பட்ட பின் எஞ்சிய செந்நிற ஒளி சந்திரன் மீது படியும். எனவே சந்திரன் செந்நிறமாக தோற்றம் அளிக்கும்.

சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். இதனால் தீங்கு விளையாது. நமது நாட்டில் தெரியக்கூடிய இது போன்றதொரு முழு சந்திர கிரகணம் மீண்டும் வருகிற ஜனவரி மாதம் 21-ந்தேதி இரவில் நிகழும்.

திருச்சி அண்ணா அறிவியல் மையம் - கோளரங்கத்தில் நாளை இரவு 8 மணி முதல் 12 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்வதையொட்டி பொதுமக்கள் காண்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனுமதி இலவசம், சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தும் கண்டு களிக்கலாம்.

இரண்டாவது அரிய வான் நிகழ்வான ‘பூமிக்கு அருகில் செவ்வாய்’ நிகழ்வும் நாளை நிகழ உள்ளது. பூமியில் இருந்து சுமார் 8.33 கோடி கி.மீ. தொலைவில் உள்ள செவ்வாய் கோளானது பூமிக்கு 5.69 கோடி கி.மீ. தொலைவில் பூமிக்கு அருகில் வருவதால் செவ்வாய் கோள் அளவில் சற்று பெரியதாகவும் பிரகாசமான செந்நிறமாகவும் காணப்படும். இதனை பொதுமக்கள் காணும் வகையில் ஜூலை 27 மற்றும் 30, 31 ஆகிய நாட்களில் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story