புதிய பாடத்திட்டத்தில் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் கிடைக்காமல் பிளஸ்-1 மாணவர்கள் தவிப்பு


புதிய பாடத்திட்டத்தில் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் கிடைக்காமல் பிளஸ்-1 மாணவர்கள் தவிப்பு
x
தினத்தந்தி 26 July 2018 3:30 AM IST (Updated: 26 July 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் கிடைக்காமல் பிளஸ்-1 மாணவ-மாணவிகள் தவித்து வருகின்றனர்.

தேனி,


தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இந்த கல்வியாண்டில் 1, 6, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்புக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள், பள்ளி திறக்கும் நாளில் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

அதன்படி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் வினியோகம் செய்யும் பணி தொடங்கிய போதிலும், பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கான பாடப்புத்தகம் முழுமையாக அச்சடித்து வழங்குவது தாமதமானது. இதன் காரணமாக பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் கிடைக்காத நிலைமை ஏற்பட்டு உள்ளது.

பள்ளிகள் திறந்து 1½ மாதம் கடந்தும் இன்னும் பல மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகம் கிடைக்கவில்லை. தமிழ், ஆங்கிலம் பாடப்புத்தகம் கிடைத்த போதிலும் அலுவலக மேலாண்மை மற்றும் செயலியல், தட்டச்சு மற்றும் கம்ப்யூட்டர் டெக்னாலஜி உள்ளிட்ட பாடங்களுக்கான புத்தகம் கிடைக்கப்பெறாமல் உள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘புத்தகங்கள் அச்சடித்து வருவதற்கு தாமதமானது. தற்போது புத்தகங்கள் வந்து விட்டன. பள்ளிகளுக்கு இவை அனுப்பப்பட்டு வருகின்றன. ஓரிரு நாட்களில் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து புத்தகங்களும் வழங்கப்பட்டு விடும். அதுவரை இணையதளத்தில் இருந்து பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்து, வகுப்புகள் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி ஆசிரியர்கள் பலர் வகுப்புகள் நடத்தி வருகின்றனர்’ என்றார். 

Next Story