லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் எதிரொலி: அரசுக்கு ரூ.30 கோடி வருவாய் இழப்பு
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் எதிரொலியாக அரசுக்கு ரூ.30 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. டீசல் விற்பனையும் குறைந்து உள்ளது.
தேனி,
டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 6-வது நாளாக நேற்றும் போராட்டம் நடந்தது. தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில் சுமார் 4,500 லாரிகள் இயக்கப்படவில்லை.
இதனால், லாரிகளில் சரக்குகள் கொண்டு செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. லாரிகள் இயக்காததால் மினிவேன், மினி லாரிகளில் சரக்குகளை அனுப்பி வைத்து வருகின்றனர். ஒரு லாரியில் அனுப்ப வேண்டிய சரக்கு களை 3 மினிவேன்கள் அல்லது 3 மினி லாரிகளில் அனுப்பி வருகின்றனர். இதனால், போக்குவரத்து செலவு 2 மடங்கு அதிகரித்து உள்ளது.
கடந்த சில நாட்களாக தேக்கம் அடைந்த விவசாய விளை பொருட்களான காபி, ஏலக்காய், காய்கறிகள் போன்றவை கொஞ்சம், கொஞ்சமாக சரக்கு வேன்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை, பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு சரக்கு வேன்கள், மினி லாரிகளில் காய்கறி, பழங்கள் அனுப்பி வைக்கப்படுவதால் போக்குவரத்து செலவு அதிகரித்து உள்ளது.
இதன் மூலம் காய்கறி, பழங்கள் விலை உயர்ந்து உள்ளது. வேலை நிறுத்தம் காரணமாக மாவட்டத்தில் பல இடங் களில் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. டிரைவர்கள், கிளனர்கள் 6 நாட்களாக வேலை இல்லாததால் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நூற்றுக்கணக்கான சுமைதூக்கும் தொழிலாளர்களும் வேலை கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். அன்றாடம் கிடைக்கும் கூலியில் குடும்பம் நடத்தி வரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள், இந்த வேலை நிறுத்தம் காரணமாக கடன் வாங்கி குடும்ப செலவுகள் செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். டீசல் விற்பனையும் சுமார் 30 முதல் 40 சதவீதம் குறைந்து உள்ளது.
அதேநேரத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுகுமாறனிடம் கேட்ட போது, ‘மாவட்டத்தில் சுமார் 4,500 லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக இயங்கவில்லை. இந்த லாரிகளுக்கு டீசல் நிரப்புதல், சுங்கச்சாவடியில் வரி செலுத்துதல், பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி செலுத்துதல் போன்றவை மூலம் அரசுக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.5 கோடி வருவாய் கிடைக்கும்.
அந்த வகையில் அரசுக்கு கடந்த 6 நாட்களில் சுமார் ரூ.30 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கிளனர்களும் பாதிக் கப்பட்டு உள்ளனர். டீசல் விற்பனை குறைந்து உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து சரக்குகள் கொண்டு வரப்படவில்லை. குடோன்களில் இருப்பு வைத்துள்ள பொருட் களை கடைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இதுவரை ஏற்படவில்லை. அதே நேரத்தில் போராட்டம் மேலும் தொடரும் பட்சத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பிறகு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்குள் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
Related Tags :
Next Story