தொழிலாளியிடம் ரூ.2 லட்சம் திருடிய குற்றவாளியை அடையாளம் காட்டிய கேமரா


தொழிலாளியிடம் ரூ.2 லட்சம் திருடிய குற்றவாளியை அடையாளம் காட்டிய கேமரா
x
தினத்தந்தி 26 July 2018 3:15 AM IST (Updated: 26 July 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

ஸ்கூட்டரில் வைத்த ரூ.2 லட்சத்தை திருடிய குற்றவாளியை சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் கண்டுபிடித்து போலீஸ் நிலையத்தில் ஆதாரத்துடன் புகார் அளித்தும் வழக்குப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆரணி, 


ஆரணியில் உள்ள இ.பி.நகரை சேர்ந்தவர் ராஜன்பாபு (வயது 40). இவர் பிரபல சிமெண்டு நிறுவனம், பெயிண்டு நிறுவனங்களுக்கு தமிழகம் முழுவதும் சுவர் விளம்பரம் செய்யும் ஏஜெண்டாக உள்ளார். இவரிடம் 10-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று முன்தினம் இவர் தன்னிடம் வேலை செய்யும் புலவன்பாடி கிராமத்தை சேர்ந்த மேகநாதனிடம் (32) தனது வங்கிக்கணக்கில் ரூ.2 லட்சம் எடுத்து வருமாறு காசோலை ஒன்றை கொடுத்தார். உடனே மேகநாதன் தன்னுடன் வேலைபார்க்கும் சீனிவாசன், ஜான்பாஷா ஆகியோரை ஸ்கூட்டரில் அழைத்துக்கொண்டு தச்சூர் சாலையில் உள்ள வங்கிக்கு சென்றார். அங்கு ரூ.2 லட்சத்தை எடுத்த மேகநாதன் ஸ்கூட்டரின் இருக்கைக்கு கீழ் உள்ள பெட்டியில் வைத்தார்.

பின்னர் 3 பேரும் வங்கியிலிருந்து சில அடி தொலைவில் உள்ள டீக்கடையில் டீ சாப்பிட்டனர். அதன்பின் தாங்கள் வேலை செய்யும் இடத்திற்கு திரும்பினர். அப்போது உரிமையாளர் ராஜன்பாபு அங்கு இல்லை. “அவர் வந்தபின் ஸ்கூட்டரிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்வோம். அதுவரை பணம் அதிலேயே இருக்கட்டும்” என கருதி பணத்தை எடுக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் மதியம் 2 மணியளவில் ராஜன்பாபு தனது அலுவலகத்துக்கு வந்தார். உடனே மேகநாதன் உள்பட 3 பேரும் ஸ்கூட்டரின் இருக்கைக்கு கீழ் பெட்டியில் வைத்திருந்த பணத்தை எடுப்பதற்காக சென்றனர். ஆனால் அதனை யாரோ அபேஸ் செய்தது தெரிய வந்தது.

அதிர்ச்சியடைந்த 3 பேரும் உரிமையாளர் ராஜன்பாபுவிடம் “நாங்கள் பணத்தை எடுத்து ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் உள்ள பெட்டியில் வைத்துக்கொண்டு டீக்கடைக்கு சென்று டீ குடித்து விட்டு வந்தோம். அப்போது யாரோ பணத்தை திருடிவிட்டார்கள்” என பதற்றத்துடன் கூறினர்.

உடனே ராஜன்பாபு நன்கு யோசித்து துரிதமாக செயல்பட்டார். அவர் 3 பேரையும் அழைத்துக்கொண்டு பணம் எடுத்த வங்கிக்கு சென்று மேலாளரை அணுகி நடந்த சம்பவத்தை தெரிவித்து வங்கி முன் கண்காணிக்கும் கேமரா காட்சிகளை பார்வையிட வேண்டும் என்றார். உடனே மேலாளர் அனுமதியுடன் கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து 3 பேரும் டீ சாப்பிட்ட கடைக்கு எதிரே உள்ள வங்கியின் கிளை மேலாளரையும் அணுகி இதே விவரத்தை தெரிவித்து கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது மேகநாதன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரின் இருக்கைக்கு கீழ் பெட்டியில் வைத்திருந்த பணத்தை ஒருவர் திருடுவது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் ஆரணி நகர போலீஸ் நிலையத்துக்கு சென்று ஆதாரத்துடன் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாலமோன்ராஜா விசாரணை நடத்திவிட்டு அவர்கள் குறிப்பிட்ட வங்கிக்கு சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு நடந்த சம்பவத்தை உறுதி செய்தார். ஆனால் அது குறித்து போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. இதனால் பணத்தை பறிகொடுத்தவர்கள் அது திரும்ப கிடைக்குமா? என்ற கவலையில் உள்ளனர். 

Next Story