காந்தி போல அனைவரும் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
உழைப்பு இல்லாத வருமானம், கருப்பு பணத்தை மாணவர்கள் தேடி செல்லக்கூடாது என்று, திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
திண்டுக்கல்,
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக திண்டுக்கல் மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்தார். மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் திண்டுக்கல் அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வந்த அவரை, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கலெக்டர் டி.ஜி.வினய் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து கவர்னர், திண்டுக்கல்லை அடுத்த சின்னாளபட்டியில் அமைந்துள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்துக்கு சென்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் நடராஜன் பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து கவர்னரை வரவேற்றார்.
மாணவ-மாணவிகளின் சாந்தி சேனா அமைப்பு சார்பில் கவர்னருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட கவர்னர், பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள காந்திய நிர்மாண திட்ட மையத்தில் உள்ள காந்தி சம்பந்தப்பட்ட புகைப்படங்களை பார்வையிட்டார். பின்னர், அனைத்துத்துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கல்வி அருங்காட்சியகத்தை, கவர்னர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.
அப்போது காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் தொடங் கப்பட்ட ஆண்டு முதல் தற்போது வரை கடந்து வந்த பாதைகள் குறித்து வைக்கப்பட்டு இருந்த புகைப்படங்கள் குறித்து, துணைவேந்தர் நடராஜன், கவர்னருக்கு எடுத்துரைத்தார். மேலும் அங்கு 46 துறைகள் சார்பில் காட்சிக்காக வைக் கப்பட்டு இருந்த பொருட்கள் குறித்து பேராசிரியர்கள் எடுத்துரைத்தனர். இதையடுத்து கிராம எரிசக்தி மையத்தில் உள்ள சோலார் திட்டம், சோலார் மூலம் இயங்கும் வாகனங்கள், காற்றாலை, குப்பைகள், சாணம் ஆகியவை மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறை குறித்து மாணவர்கள் விளக்கமளித்தனர்.
இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் மரக்கன்று நட்டார். பின்னர் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகம், ஆடை வடிவமைப்புத்துறை கண்காட்சி, விவசாய கருவிகள், இருசக்கர பழுது நீக்கும் பயிற்சி மையம் ஆகியவற்றை கவர்னர் பார்வையிட்டார். அடுத்ததாக, பல்கலைக்கழக கூட்ட அரங்கில் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் மத்தியில் கவர்னர் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் நடராஜன் தலைமை தாங்கினார். கலெக்டர் டி.ஜி.வினய் முன்னிலை வகித்தார்.
பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் கவர்னர் பேசியதாவது:-
காந்தியின் கருத்துக்கள், தத்துவம், கொள்கைகளை பின்பற்றி காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள நூலகம் அருமையாக உள்ளது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துகொண்டு இருந்தபோது, அதனை எதிர்த்து குரல்கொடுத்து போராடி சுதந்திரம் வாங்கி தந்தவர் காந்தி.
அவர் தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக, அதனை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் 9 புத்தகங்களை வாங்கி படித்துள்ளார். காந்தி சமர்பதி ஆசிரமத்தை தொடங்கியபோது முதலில் 25 பேர் இருந்தனர். அதில் 13 பேர் தமிழர்கள் ஆவர். அரசியல்வாதிகள் கொள்கை இல்லாமல் இருக்க கூடாது என்று காந்தி கூறியுள்ளார். காந்தியின் வழியில் நாம் அனைவரும் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
மாணவ பருவத்தில் கல்லூரி படிக்கும் காலம் பொன்னானது ஆகும். புகைபிடித்தல், சூதாட்டம் உள்ளிட்ட பழக்கங்கள் சிறிது நேரம் மட்டுமே சந்தோஷம் தரும். ஆனால் கல்வி மூலம் கிடைக்கும் அறிவானது எப்போதும் இனிமையானது.
உழைப்பு இல்லாத வருமானத்தையும், கருப்பு பணத்தையும் மாணவர்கள் தேடி செல்லக்கூடாது. காந்தியின் கொள்கைகளை பின்பற்றி அவருடைய சீடர்களை போல மாணவர்கள் வாழ வேண்டும். மாணவர்கள், அப்துல்கலாமை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியின்போது, பல்கலைக்கழக துணை வேந்தர், கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு நினைவு பரிசு வழங்கினார்.
காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, மாலையில் கவர்னர் திண்டுக்கல் அரசினர் விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார்.
பின்னர் இரவு 7.50 மணி அளவில், பழனி முருகன் கோவிலுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வந்தார். அவருடன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கலெக்டர் டி.ஜி.வினய், போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், கூடுதல் துணை சூப்பிரண்டு சுஹாசினி மற்றும் அதிகாரிகள் வந்தனர். வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப்கார் இயக்கப்படாததால் மின் இழுவை ரெயில் மூலம் கவர்னர் மற்றும் அதிகாரிகள் மலைக் கோவிலுக்கு வந்தனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் அங்கு கவர்னருக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவில் இணை ஆணையர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் கவர்னருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதையடுத்து வெளிப்பிரகாரம் வழியாக ஆனந்த விநாயகர் சன்னதிக்கு சென்ற கவர்னர் விநாயகரை வணங்கி வழிபாடு நடத்தினார்.
தொடர்ந்து மலைக்கோவில் மூலவர் சன்னதிக்கு சென்ற கவர்னர், முருகப்பெருமானை வழிபட்டார். அதைத்தொடர்ந்து கோவில் குருக்கள் செல்வசுப்பிரமணியம் தலைமையிலான குருக்கள் சிறப்பு பூஜைகள் செய்து கவர்னருக்கு பிரசாதம் வழங்கினர். அதையடுத்து மின்இழுவை ரெயில் மூலம் அடிவாரம் பகுதிக்கு கவர்னர் வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் திண்டுக்கல்லுக்கு புறப்பட்டு சென்றார்.
கவர்னர் செல்லும் மாவட்டங்களில் எல்லாம் எதிர்க்கட்சினர் கருப்புக்கொடி காட்டுகின்றனர். இதனால் திண்டுக்கல்லில் இருந்து காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.
இன்று (வியாழக்கிழமை) கவர்னர் பன்வாரிலால் புரோகித், திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் நடைபெறும் தூய்மை இந்தியா திட்டப்பணிகளை பார்வையிடுகிறார். இதையடுத்து விருந்தினர் மாளிகையில் பகல் 11.45 மணி முதல் மதியம் 1 மணி வரை அரசியல் கட்சியினர், மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து கவர்னர் மனுக்களை வாங்குகிறார். பின்னர் கார் மூலம் மதுரைக்கு சென்று, அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு சென்னைக்கு செல்கிறார்.
Related Tags :
Next Story