6-வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம்: யஷ்வந்தபுரம் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டுக்கு சரக்குகள் வருகை குறைந்தது


6-வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம்: யஷ்வந்தபுரம் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டுக்கு சரக்குகள் வருகை குறைந்தது
x
தினத்தந்தி 25 July 2018 10:30 PM GMT (Updated: 25 July 2018 9:58 PM GMT)

லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நீடித்து வருவதால், யஷ்வந்தபுரம் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டுக்கு சரக்குகள் வருவது குறைந்துவிட்டது. இதனால் சர்க்கரை விலை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்ந்துவிட்டது.

பெங்களூரு,

சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், டீசல் விலையை குறைக்க வேண்டும், 3-வது நபர் காப்பீட்டு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலை நிறுத்தம் கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 6-வது நாளாக இந்த வேலை நிறுத்தம் நீடித்தது.

நாடு முழுவதும் சுமார் 90 லட்சம் லாரிகள் ஓடவில்லை. இதனால் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. இவற்றின் காரணமாக காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. கர்நாடகத்தை பொறுத்தவரையில் 6 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. அந்த லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இதனால் கர்நாடகத்தில் சுமார் 15 ஆயிரம் லோடு சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. இதன் மதிப்பு ரூ.25 ஆயிரம் கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் உள்ள ஏ.பி.எம்.சி. யார்டு மார்க்கெட்டில் இரும்பு கம்பிகள், சிமெண்டு, வெங்காயம், துவரம் பருப்பு உள்பட பல்வேறு பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு செல்ல முடியாமல் கர்நாடகத்தில் தேங்கியுள்ளன. இதனால் மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு ஏ.பி.எம்.சி. யார்டு மார்க்கெட்டு வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜண்ணா கூறியதாவது:-

“லாரிகள் வேலை நிறுத்தத்தால் எங்கள் சந்தையில் பெரிய அளவுக்கு பாதிப்புகள் ஏற்படவில்லை. இந்த சந்தைக்கு தினமும் 500 லாரி லோடு சரக்குகள் வருகின்றன. அது இன்று (அதாவது நேற்று) குறைந்து லோடு வருகையின் எண்ணிக்கை 304 ஆக குறைந்தது. நாளை (அதாவது இன்று) முதல் சரக்குகள் வருகை மேலும் குறையும் நிலை உள்ளது.

இதனால் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள். வியாபாரிகளும் பாதிக்கப்படுவார்கள். உருளைகிழங்கு வருகை 50 சதவீதம் குறைந்துவிட்டது. விரைவாக கெட்டுப்போகும் பொருட்களை கொண்டு வர லாரி உரிமையாளர்கள் அனுமதிக்க வேண்டும். மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது“. இவ்வாறு அவர் கூறினார்.

ஏ.பி.எம்.சி. உணவு தானிய வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் சஞ்சய் பசீன் கூறும்போது, “லாரிகள் வேலை நிறுத்தத்தால் சர்க்கரை வரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் சர்க்கரை விலை கிலோவுக்கு 2 ரூபாய் அதிகரித்து உள்ளது. பெங்களூரு, ராமநகர், ஹாசன், நெலமங்களா, துமகூரு மாவட்டங்களில் இருந்து தான் உணவு தானிய பொருட்கள் சந்தைக்கு வருகின்றன. லாரி வேலை நிறுத்தம் முடிவுக்கு வராவிட்டால் கோதுமை, அரிசி, பருப்புகளின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்“ என்றார்.

இந்த நிலையில் யஷ்வந்தபுரம் ஏ.பி.எம்.சி. யார்டு மார்க்கெட்டில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கிளனர்கள் போராட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக டிரைவர், கிளனர்கள் கிரிக்கெட், சீட்டுக்கட்டு ஆகிய விளையாட்டுகளை விளையாடி பொழுதை கழித்ததை காண முடிந்தது.

Next Story