ஜவுளிக்கடையில் ஆண் வேடமிட்டு துணிகளை திருடிய பெண் கைது
வத்தலக்குண்டு ஜவுளிக்கடையில் ஆண் வேடமிட்டு துணிகளை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது கணவர் உள்பட 4 பேரை போலீசார் வவைவீசி தேடி வருகின்றனர்.
வத்தலக்குண்டு,
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு கடைவீதியில் ஒரு ஜவுளிக்கடை உள்ளது. இந்த ஜவுளிக்கடைக்கு 2 பெண்கள் உள்பட 5 பேர் காரில் வந்தனர். பின்னர் அங்கு பெண்கள் ஆடை பிரிவுக்கு சென்று சேலைகள், ஜாக்கெட் துணிகளை எடுத்து பார்த்தனர். சிறிது நேரத்தில் ஆடைகள் தங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு 5 பேரும் வெளியே சென்றனர். இதையடுத்து கடை ஊழியர்கள் துணிகளை அடுக்கி கொண்டிருந்தனர். அப்போது 5 சேலைகள், 12 ஜாக்கெட் துணிகளை காணவில்லை. இதனால் அந்த 5 பேர் மீது கடை ஊழியர்களுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து ஊழியர்கள் கடைக்கு வெளியே வந்து 5 பேரையும் அழைத்தனர். உடனே 5 பேரும் காரில் ஏறி தப்ப முயன்றனர். ஆனால், திடீரென ஏற்பட்ட பழுதால் காரை இயக்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து 5 பேரும் காரில் இருந்து இறங்கி ஓடினர். அவர்களை ஜவுளிக்கடை ஊழியர்கள் துரத்தினர். அதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் தப்பியோடி விட்டனர். ஒருவர் மட்டும் சிக்கிக் கொண்டார். அவரை பிடித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் பிடிபட்டவர் மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தை சேர்ந்த முருகேசன் மனைவி ராணி (வயது 32) என்பதும், அவர் துணிகளை திருட வேட்டி, சட்டை அணிந்து ஆண் வேடத்தில் வந்ததும் தெரியவந்தது. மேலும் தப்பி சென்றவர்கள் ராணியின் கணவர் முருகேசன் (35), மற்றும் உறவினர்கள் செல்லச்சாமி, வண்ணமதி, கொடி ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணியை கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த கார், ஜவுளிக்கடையில் திருடிய துணிகளையும் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story