கும்மிடிப்பூண்டி அருகே பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்தது


கும்மிடிப்பூண்டி அருகே பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 26 July 2018 4:00 AM IST (Updated: 26 July 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கும்மிடிப்பூண்டி,

சென்னை அத்திப்பட்டில் இருந்து ஒரு டேங்கர் லாரியில் 8 ஆயிரம் லிட்டர் டீசல் மற்றும் 4 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் என மொத்தம் 12 ஆயிரம் லிட்டர் வாகன எரிபொருட்கள் ஆந்திர மாநிலம் தடாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. டேங்கர் லாரியை ஆந்திர மாநிலம் தடாவை சேர்ந்த டிரைவர் பார்த்தசாரதி (வயது 36) ஓட்டினார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் பணி நிறைவடையாத மேம்பாலத்தின் கீழ் சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அந்த லாரி சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் மற்றும் அதன் அருகே இருந்த தற்காலிக சிமெண்டு தடுப்புகள் மீது லாரி மோதியது.

இதில் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து லாரியில் இருந்த பெட்ரோலும், டீசலும் சாலையில் ஆறாக ஓடியது.

தகவல் அறிந்து தாசில்தார் மதன்குப்புராஜ், கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மேலும் தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ் அங்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. டிராக்டரில் ஈரமணல் அள்ளி வந்து சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டது. அந்த மணல் சாலையில் நாலாபுறமும் கசிந்து ஓடிய பெட்ரோல் மற்றும் டீசல் மீது அள்ளி போடப்டபட்டது.

அதே சமயத்தில் விபத்து நடந்த பகுதியின் அருகே பொதுமக்கள் மற்றும் புகைபிடிப்பவர்கள் யாரும் வராத வகையில் போலீசார் தற்காலிக தடுப்பு வளையத்தை அமைத்தனர். இது தவிர செல்போனில் வீடியோ பதிவு செய்த நபர்களை அங்கிருந்து உடனடியாக போலீசார் அப்புறப்படுத்தினர்.

டேங்கர் லாரியின் பக்கவாட்டு பகுதிகளில் லாரி சூடாகாமல் இருக்க தொடர்ந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. மேலும் தீ விபத்து ஏற்படாமல் இருக்க சிறப்பு நுரை கலவை கொண்ட ரசாயன கரைசலையும் லாரி முழுவதும் தீயணைப்புத்துறையினர் பீய்ச்சி அடித்தனர்.

முதலில் டேங்கர் லாரியில் இருந்து கசிந்து ஓடிய பெட்ரோல் மற்றும் டீசலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது பலன் தரவில்லை.

இதற்கிடையில் 3 கிரேன், 2 தீயணைப்பு வாகனங்களை கொண்டு வந்து கவிழ்ந்த டேங்கர் லாரியை, பல்வேறு போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பாக நிமிர்த்தி நிறுத்தினர்.

எந்த வித அசாம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் டேங்கர் லாரி பத்திரமாக மீட்கப்பட்டதை கண்டு அதிகாரிகளும், பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.

இந்த விபத்தால் சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் டேங்கர் லாரியின் டிரைவர் பார்த்தசாரதி காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story