பட்டப்பகலில் பயங்கரம்: ஓட, ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை
கண்டிகை அருகே ஓட, ஓட விரட்டி ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த கண்டிகை அருகே உள்ள நெடுங்குன்றத்தை சேர்ந்த குட்டி மகன் உதயா என்ற உதயராஜ் (வயது 28). ரவுடி. இவரது நண்பர் பிரகாஷ். இவர் சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர்.
இவர்கள் இருவரும் நேற்று காலையில் மோட்டார் சைக்கிளில், வண்டலூர்–கேளம்பாக்கம் சாலையில் கொளப்பாக்கத்தில் இருந்து கண்டிகையை நோக்கி சென்றுகொண்டு இருந்தனர்.
அப்போது 3 மோட்டார் சைக்கிளில் 5 பேர் கொண்ட ரவுடி கும்பல், அரிவாள், கத்தியுடன் அவர்களை பின் தொடர்ந்து வந்தனர். ரத்தினமங்கலம் அருகே உள்ள ஏரி முட்புதர் பகுதியில் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளை சுற்றி வளைத்தது. உதயராஜ், பிரகாஷ் ஆகியோரை அந்த கும்பல் தாக்கத் தொடங்கியது.
சுதாரித்துக்கொண்ட இருவரும் அங்கிருந்து தப்ப முயன்றனர். ஆனால் உதயராஜ் அந்த கும்பலிடம் மாட்டிக்கொண்டார். அவரை 5 பேரும் சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த உதயராஜ், உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.
சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால், ரவுடிக் கும்பலை சேர்ந்த 5 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் தப்பி சென்றனர். அவசரத்தில் ஒரு மோட்டார் சைக்கிளை சம்பவ இடத்திலேயே கொலையாளிகள் விட்டு சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த உதயராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அங்கிருந்து உதயராஜ் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும், கொலையாளிகள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளையும், சில செருப்பு துண்டுகளையும் அவர்கள் கைப்பற்றினர்.
சம்பவ இடத்துக்கு வந்த கைரேகைப் பிரிவு நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். பிராவ் என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிய மோப்பநாய், யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர கொலைத் தொடர்பாக தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சந்தேகத்தின் பேரில் உதயராஜின் உறவினர் ஒருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கொலை செய்யப்பட்ட உதயராஜ் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவருடைய அண்ணன் சூர்யாவும் பிரபல ரவுடி ஆவார். இதனால் முன்விரோதம் காரணமாக உதயராஜ் தீர்த்துக்கட்டப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.