அய்யனார் கோவில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு
ஸ்ரீமுஷ்ணம் அருகே நள்ளிரவில் அய்யனார் கோவில் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கல்லுமேட்டு பகுதியில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கலியங்குப்பத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவர் பூசாரியாக உள்ளார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக கோவில் வளாகத்தில் 2 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பூஜை முடிந்ததும் கொளஞ்சி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலை கொளஞ்சி வழக்கம் போல் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது கோவிலில் இருந்த 2 உண்டியல்களும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த காணிக்கை பணத்தை காணவில்லை. மேலும் கோவிலில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கி கருவிகள், 100 கிலோ எடையுள்ள பித்தளை மற்றும் செப்பு பாத்திரங்களையும் காணவில்லை. இதுகுறித்து அவர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நேற்று முன்தினம் இரவு பூசாரி கொளஞ்சி கோவிலை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த 2 உண்டியல்களை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தையும், கோவிலில் இருந்த ஒலிபெருக்கி கருவிகள், பித்தளை உள்ளிட்ட பொருட்களையும் திருடி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. 2 உண்டியல்களிலும் ரூ.10 ஆயிரம் இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story