சிதம்பரம் அருகே தொழிலாளி, தூக்குப்போட்டு தற்கொலை
சிதம்பரம் அருகே கோபித்துக் கொண்டு சென்ற மனைவி, குழந்தையை தர மறுத்ததால் மனமுடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே உள்ள வேளக்குடி ஆணைக்கார தெருவை சேர்ந்தவர் துரை மகன் பாபு(வயது 25), கூலி தொழிலாளி. இவரும் சிதம்பரம் மடத்தான்தோப்பு பகுதியை சேர்ந்த சிவகாமசுந்தரி(22) என்பவரும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அனேஷ்கா என்ற 1 வயது பெண் குழந்தை உள்ளது.கடந்த சில மாதங்களாக பாபுவுக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் வீட்டுக்கு வந்த பாபு, மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவகாமசுந்தரி கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பாபு, மனைவியை நேரில் சந்தித்து தனது குழந்தையை தன்னிடம் கொடுத்து விடு என கேட்டுள்ளார். அதற்கு சிவகாமசுந்தரி குழந்தையை உங்களிடம் தரமுடியாது என கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த பாபு வீட்டுக்கு வந்து, புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து துரை கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story