கடையம் அருகே சுயஉதவி குழுவில் பெண்களை சேர்ப்பதாக கூறி பணம் மோசடி 2 வாலிபர்கள் சிக்கினர்
கடையம் அருகே சுயஉதவி குழுவில் பெண்களை சேர்ப்பதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் போலீசில் சிக்கினர்.
கடையம்,
கடையம் அருகே சுயஉதவி குழுவில் பெண்களை சேர்ப்பதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் போலீசில் சிக்கினர்.
ருத்ரா மகளிர் குழு
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள குத்தபாஞ்சான், நாலாங்கட்டளை, கட்டளையூர், சொக்கநாதன்பட்டி ஆகிய கிராமங்களில் ருத்ரா மகளிர் சுயஉதவி குழு என்ற பெயரில் 2 வாலிபர்கள் பீடி சுற்றும் பெண்களை குழுவில் சேர்ப்பதாக கூறினர். இதில் ரூ.504 கட்டினால் ரூ.35 ஆயிரம் கடன் தரப்படும் என்று அவர்கள் கூறினார்கள். இதை நம்பிய 50-க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த 2 வாலிபரிகளிடம் பணம் கொடுத்தனர். இதற்கிடையே அப்பகுதி மக்கள் விசாரித்த போது அப்படி ஒரு குழு இல்லை என தெரிய வந்தது. அதனால் பணம் கொடுத்த பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
2 பேர் சிக்கினர்
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் சொக்கநாதன்பட்டி கிராமத்தில் குழுவில் பெண்களை சேர்ப்பதற்காக அந்த 2 வாலிபர்கள் வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட மகளிரணி அந்தோணியம்மாள், கடையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி மற்றும் பொதுமக்கள் அங்கு விரைந்து சென்றனர். அந்த 2 வாலிபர்களையும் பிடித்து கடையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், 2 பேரும் முக்கூடல் அருகே உள்ள இடைகால் சிவன்கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தங்கபாண்டி (வயது 29), கந்தசாமி மகன் மகராஜன் (29) என தெரியவந்தது. இவர்கள் 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம் சுமார் ரூ.25 ஆயிரம் வரை மோசடி செய்ததும் தெரியவந்தது.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பிடிபட்ட வாலிபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அங்கு திரண்டிருந்த பெண்களிடம் நீங்கள் கட்டிய பணம் மீட்டு தரப்படும் என கூறியதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story